அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கம்: EPS கடும் நடவடிக்கை
அதிமுக முன்னணி தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டு, அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
வெளியிடப்பட்ட அறிக்கையில் EPS கூறியதாவது:
செங்கோட்டையன் கட்சியின் கொள்கை, கோட்பாடு மற்றும் ஒழுங்கு முறைக்கு எதிராக செயல்பட்டு, அதிமுக மரியாதைக்கும் பெயருக்கும் சேதம் விளைவித்துள்ளார். கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது என்பதனை அறிந்திருந்தும் அந்த விதியை மீறி, கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்கும் வகையில் செயல்பட்டதால், அவர் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுகிறார். எந்த அதிமுக உறுப்பினரும் அவருடன் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பின்னணி
சமீபத்தில் செங்கோட்டையன், கட்சியில் இருந்து வெளியேறியவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து, அதற்கு காலக்கெடும் நிர்ணயித்திருந்தார். இதன் காரணமாக அவரின் பொறுப்புகள் அகற்றப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, மதுரையில் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த சென்றபோது, ஓ.பன்னீர்செல்வத்துடன் சந்தித்து உரையாடினார். பின்னர் டிடிவி தினகரனுடன் இணைந்து ராமநாதபுரத்தில் ஆலோசனையும் நடத்தினார். பின்னர் பசும்பொனில் தேவர் நினைவிடம் சென்ற மூவரும் அஞ்சலி செலுத்தினர். அங்கு சசிகலாவையும் OPS, செங்கோட்டையன் சந்தித்து பேசியது அதிமுகவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிகழ்வுகளுக்குப் பிறகு, மதுரையில் நடைபெற்ற ஆலோசனைக்கு பின், “செங்கோட்டையனை நீக்குவதில் தயக்கம் இல்லை, விதிமுறைக்கேற்ப நடவடிக்கை வரும்” என EPS குறிப்பிட்டார். அதனைத்தொடர்ந்து, இன்று செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து ஒழுக்கத்துறையாக நீக்கப்பட்டார்.