புதுச்சேரியில் மின் கட்டண உயர்வுக்கு எதிராக அதிமுக போராட்டம்
புதுச்சேரியில் மின் கட்டண உயர்வை கண்டித்து, அதிமுக சார்பில் மாநில தலைவர் அன்பழகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மின் கட்டணம் அதிகரித்ததை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும் என முன்பே அறிவிக்கப்பட்டது. அதன்படி, உப்பளத்தில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திலிருந்து ஊர்வலமாக புறப்பட்ட அதிமுகவினர், மின்துறை தலைமை அலுவலகம் முன்பு சென்றனர்.
அங்கு அரசு மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர். பாதுகாப்பு காரணமாக, மின்துறை அலுவலகத்தின் இரண்டு நுழைவாயில்கள் பூட்டப்பட்டன. மேலும், ஒதியஞ்சாலை ஆய்வாளர் செல்தில்குமார் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
ஆனால் திடீரென, அதிமுகவினர் அலுவலக கேட்டை திறந்து உள்ளே செல்ல முயன்றதால், போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சிலர் தடையை மீறி அலுவலக வளாகத்திற்குள் நுழைந்து முதல் மாடியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக போலீசார் வந்து அவர்களை தடுத்தனர்.
அதிமுக நிர்வாகிகள், மின்துறை தலைவரைச் சந்திக்க அனுமதி கோரினர். ஆரம்பத்தில் இரண்டு பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். இதனால் கலக்கமான சூழல் உருவானது. பின்னர் 10 முக்கிய நிர்வாகிகள் கண்காணிப்பு பொறியாளர் கனியமுதனை சந்தித்து, மின் கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரிக்கை வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்பழகன், “லாபத்தில் இயங்கும் மின்துறையை தனியார் மயமாக்க அரசு முயற்சிப்பது மக்களை ஏமாற்றுவது. ஒரு வருடத்தில் பலமுறை மின் கட்டணத்தை உயர்த்துவது மக்களை வஞ்சிப்பதாகும். மின் நுகர்வோரின் மீது அரசு அடக்குமுறையில் செயல்படுகிறது” என்றார்.
மேலும், மின் கட்டண ஸ்லாப் முறை மறைமுகமாக மாற்றப்பட்டுள்ளதையும், ஏழை மற்றும் நடுத்தர வர்க்கம் அதிகமாக பாதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார். புதிய கட்டணத்தை அரசு மானியமாக வழங்குவோம் என்ற விளக்கம் மக்களை மயக்கும் முயற்சி எனக் குற்றம் சாட்டினார். “உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை அரசு திரும்பப் பெற வேண்டும்” என்று வலியுறுத்தினார்.