என்டிஏ தேர்தல் அறிக்கை நிகழ்வில் நிதிஷ் பேச அனுமதிக்கவில்லை – காங்கிரஸ் குற்றச்சாட்டு
பிஹார் சட்டசபை தேர்தலுக்கான தேசிய ஜனநாயக கூட்டணியின் (என்டிஏ) தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்வில் முதல்வர் நிதிஷ் குமார் பேச அனுமதிக்கப்படவில்லை என்று காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.
என்டிஏ கூட்டணி தலைவர்கள் — நிதிஷ் குமார், துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி, பாஜக தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் பிறர் — தேர்தல் அறிக்கையை ஏறக்குறைய 26 வினாடிகளில் வெளியிட்டு உடனடியாக இடத்தைவிட்டு சென்றனர். தேர்தல் தின வேலைகள் காரணமாக அவர்கள் வெளியேறியதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது. சாம்ராட் சவுத்ரி மட்டும் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
இந்த நிகழ்வை விமர்சித்த காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட்,
“20 ஆண்டுகால ஆட்சியின் கேள்விகளை எதிர்கொள்ள என்டிஏ தலைவர்கள் பயந்தனர். நிதிஷ் குமாரை பேசவிடாதது ஏன்? அவர் பேசும் நிலையில் இல்லையா? இந்த தேர்தல் அறிக்கை பொய்களின் தொகுப்பு”
என்று தெரிவித்துள்ளார்.
மேலும், காங்கிரஸ் எம்.பி. அகிலேஷ் பிரசாத் சிங்,
“நிதிஷ் குமாரை பேச அனுமதிக்காதது பிஹார் மக்களுக்கு அவமானம்”
என்று கடுமையாக சாடினார்.
இந்நிலையில் என்டிஏ தேர்தல் அறிக்கை முக்கிய வாக்குறுதிகளில், 1 கோடி வேலைவாய்ப்புகள், விவசாயிகளுக்கு வருடம் ரூ.9,000 உதவி, நான்கு நகரங்களில் மெட்ரோ சேவை, ஏழு சர்வதேச விமான நிலையங்கள், விரைவுச்சாலைகள், தொழிற்பூங்காக்கள், இலவச தரமான கல்வி மற்றும் பட்டியல் சமூக மாணவர்களுக்கு மாதம் ரூ.2,000 உதவி தொகை உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.