33 ஆண்டுகள் கழித்து அமெரிக்காவில் மீண்டும் அணு ஆயுத சோதனை – டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு
அமெரிக்காவில் மீண்டும் அணு ஆயுத சோதனை நடத்தப்படும் என அந்த நாட்டின் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்கா 1945 ஜூலை 16 அன்று முதல் அணு சோதனை செய்தது. இதுவரை மொத்தம் 1,054 அணு சோதனைகள் செய்துள்ளது. கடைசியாக 1992 செப்டம்பர் 23 அன்று நெவாடா பகுதியில் 2,300 அடி ஆழத்தில் அணு சோதனை நடத்தப்பட்டது.
தற்போது அமெரிக்காவிடம் 5,044 அணு ஆயுதங்கள் உள்ளன; அதே அளவுக்கு ரஷ்யாவும் ஆயுதங்கள் வைத்துள்ளது. சீனாவிடம் 550, பிரான்ஸில் 290, பிரிட்டனில் 225, இந்தியாவில் 180 அணு ஆயுதங்கள் உள்ளன.
சமீபத்தில் ரஷ்யா உலகின் முதல் அணு சக்தி இயங்குதள ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக செய்தது. 14,000 கி.மீ தூரம் செல்லும் இந்த ஏவுகணை 15 மணி நேரம் தொடர்ச்சியாக பறக்கும் திறன் கொண்டது. மேலும் சீனா 2030க்குள் தனது அணு ஆயுத எண்ணிக்கையை 1,000 ஆக உயர்த்தத் திட்டமிட்டுள்ளது. சீனா 1990க்குப் பிறகு அதிகாரப்பூர்வமாக அணு சோதனை செய்யவில்லை என்றாலும் ரகசிய சோதனைகள் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சூழலில் ட்ரம்ப் தனது சமூக வலைத்தள பதிவில்,
“அமெரிக்காவிடம் உலகிலேயே அதிக அணு ஆயுதங்கள் உள்ளன. என் முதலாவது ஆட்சிக்காலத்தில் அவை புதுப்பிக்கப்பட்டன. உலகப் பாதுகாப்பு சூழலை கருத்தில் கொண்டு 33 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அணு ஆயுத சோதனை செய்ய அனுமதி வழங்கியுள்ளேன். அணு சோதனைகளை விரும்பவில்லை; ஆனால் மற்ற நாடுகள் செய்கிற சூழலில் அமெரிக்காவும் தயாராக இருக்க வேண்டும்”
என தெரிவித்துள்ளார்.