தவெக கூட்ட நெரிசல் சம்பவம்: சிபிஐ நேரில் சென்று விசாரணை
கரூர் வேலுசாமிபுரத்தில் செப்டம்பர் 27ஆம் தேதி நடந்த தவெக அரசியல் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த வழக்கை முதலில் கரூர் நகர போலீஸ் விசாரித்தது. பின்னர் உயர்நீதிமன்றம் அக்டோபர் 3ஆம் தேதி சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்தது. தொடர்ந்து உச்சநீதிமன்றம் அக்டோபர் 13ஆம் தேதி வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது.
அதன்படி அக்டோபர் 18ஆம் தேதி சிபிஐ, தவெக தலைவர்கள் மதியழகன், புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் உள்ளிட்ட பலர்மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்தது. விசாரணைக்காக சிபிஐ அதிகாரிகள் கரூரில் தங்கி ஆவணங்களை பரிசீலித்து வருகின்றனர்.
அக்டோபர் 31 காலை, சிபிஐ அதிகாரிகள் சம்பவம் நடந்த வேலுசாமிபுரம் இடத்தை நேரில் ஆய்வு செய்தனர். அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு போக்குவரத்து தடை விதிக்கப்பட்டது. சம்பவத்தை பார்த்த சாட்சிகள், போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்டவர்களிடம் சிபிஐ விசாரணை நடத்தியது.
விசாரணையின்போது கேமரா, வீடியோ, ஸ்கேனர் போன்ற கருவிகள் பயன்படுத்தப்பட்டன. முன்னதாக சம்பவ இடத்தில் இருந்த ஒளிப்பதிவு தனியார் நபர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் ஆகியோரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.