“தமிழர்–பிஹார் மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் அரசியல் தவறு” – பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கண்டனம்
தமிழர் மற்றும் பிஹார் மாநில மக்களுக்கிடையே விரோத உணர்வை உருவாக்கும் அரசியல் செயல்களை நிறுத்தி, நாட்டின் முன்னேற்றத்திற்கு கவனம் செலுத்த வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில்,
“இந்த நாட்டின் பிரதமராக இருப்பதை பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி மறந்து, பொறுப்புக்கு மாறான கருத்துக்களை வெளியிடுவது வருத்தம் அளிக்கிறது. ஒரு தமிழனாக எனது வேதனையை தெரிவிக்கிறேன்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்,
“ஒடிசா, பிஹார் போன்ற மாநிலங்களில் பிரச்சாரம் செய்யும் வேளையில், பாஜக தலைவர்கள் தமிழர்களுக்கு எதிராக தேர்தல் நலன் கருதி வெறுப்பு உணர்ச்சியை தூண்டுகிறார்களே என்பதே கவலைக்குரியது. இதற்கு தமிழ்நாட்டு மக்களின் முதல்வராக கடும் கண்டனம் தெரிவிக்கிறேன்” என்றும் கூறியுள்ளார்.
அதன்பின் அவர் மேலும் தெரிவித்ததாவது:
“பன்முகத்தன்மையும், ஒற்றுமையையும் தழுவியுள்ள இந்தியாவில் மத அடிப்படையில் அல்லது மாநில அடிப்படையில் மக்கள் ஒருவருக்கொருவர் எதிரான சூழலை உருவாக்கும் அற்ப அரசியலை பாஜக நிறுத்த வேண்டும். நாடு முன்னேற வேண்டும் என்றால் இதுபோன்ற பேச்சு, செயல்களை விட்டு விலகி, நாட்டின் நலனில் கவனம் செலுத்த வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
இதற்குக் காரணமாக, பிஹாரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி, “தமிழ்நாட்டில் திமுக அரசு பிஹாரைச் சேர்ந்த தொழிலாளர்களை துன்புறுத்துகிறது” என கூறியிருந்தார்.