தவெகவின் அடுத்தகட்ட நகர்வு: விஜய்யின் மீண்டுவரும் நேரம் எப்போது?
கரூரில் ஏற்பட்ட விபத்துக்குப் பிறகு, தனது அனைத்து அரசியல் நடவடிக்கைகளையும் நிறுத்தி வைத்திருந்த தவெக, தற்போது படிப்படியாக மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், விஜய் மீண்டும் பொது நிகழ்வுகளில் எப்போது தோன்றுவார் என்ற கேள்வியே கட்சி வட்டாரத்தில் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம், விஜய்யின் செயல்பாடுகளையும் தவெக இயக்கத்தையும் ஒரு மாதத்திற்கும் மேலாக நின்றுகொண்ட நிலைக்கு தள்ளியது. அரசு, காவல்துறை மீதான குற்றச்சாட்டுகளுக்கு இணையாக, தங்களது அணியின் தவறுகளையும் தற்போது ஆராய தொடங்கியுள்ளனர்.
கரூர் விபத்து நேரத்தில் தலைமை மற்றும் நிர்வாகம் எப்படிச் செயல்பட்டிருக்க வேண்டும், மக்கள் மனநிலை தற்போது எப்படி இருக்கிறது போன்ற அம்சங்களை விஜய் விரிவாக ஆராய்ந்து வருகிறார். இதற்காக சமீபத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளை தனித்தனியாக அழைத்து ஆலோசனைகள் கேட்டு வருகிறார். குறிப்பாக, நிகழ்ச்சி ஏற்பாடுகள் மற்றும் நிர்வாக குறைபாடுகள் குறித்து புஸ்ஸி ஆனந்தை கடுமையாக கண்டித்ததாகவும், ஆதவ் அர்ஜுனா, ஜான் ஆரோக்கியசாமியிடமும் தன் அதிருப்தியை வெளிப்படுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஜயின் கீழ் செயல்படும் முக்கிய தலைவர்கள் தனித்தனி குழுக்களாகப் பிரிந்து இயங்குகிறார்கள் என்ற புகார்களும் எழுந்துள்ளதால், அது நிர்வாகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. இதனால் தான் விஜய் 28 பேர் கொண்ட நிர்வாகக் குழுவை அமைத்ததுடன், நவம்பர் 5-ஆம் தேதி சிறப்பு பொதுக்குழுவை கூட்ட திட்டமிட்டுள்ளார்.
விஜய்யின் அடுத்த கட்ட திட்டங்கள்
செப்டம்பர் 27-ல் கரூரில் பேசிய பின்னர் விஜய் பொது மேடையில் தோன்றவில்லை. தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கையில், கடந்த ஒரு மாதமாக கட்சி நடவடிக்கைகள் மந்தமான நிலையில் உள்ளது. இதை மாற்றி, புதிய முடிவுகளை எடுக்க விஜய் தயாராகி வருகிறார்.
ரோடு ஷோ முறையில் ஏற்பட்ட சிக்கல்களை கருத்தில் கொண்டு, இனி மக்களை எப்படிச் சந்திப்பது, பாதுகாப்பு நடவடிக்கைகள் எப்படி இருக்கும், காவல்துறை வழிகாட்டுதலை எப்படி பின்பற்றுவது போன்றவற்றை ஆலோசித்து வருகிறார்.
மேலும், நீதிமன்ற உத்தரவின் பேரில் அரசின் புதிய வழிகாட்டுதல்கள் வெளிவரும் வரை பெரிய பொதுக் கூட்டங்கள் நடத்த முடியாது. அந்த வழிகாட்டுதல்கள் வந்தபின் தன்னுடைய அடுத்த அரசியல் நகர்வை அறிவிக்க விஜய் திட்டமிட்டுள்ளார்.
கரூர் சம்பவத்துக்குப் பிறகு விஜய் மறைந்து விட்டார், பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்கவில்லை போன்ற விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், இந்த எதிர்மறை பார்வைகளை மாற்ற என்ன செய்யலாம் எனவும் விஜய் பேசுகிறார்.
கூட்டணி சிக்கல்
அதிமுக தரப்பு விஜயை கூட்டணிக்கு வர அழைக்க முயற்சித்தாலும், விஜய் தரப்பு இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை என்பது தகவல்.
மாநாடுகள், சுற்றுப்பயணங்கள் மூலம் வேகமாக முன்னேறியிருந்த விஜயின் அரசியல் பயணம் இப்போது தற்காலிக தடங்கலில் நிற்கிறது. இந்த தடையை உடைத்து எப்போது வெளியில் வருவார் என்பதே தவெக ஆதரவாளர்களின் எதிர்பார்ப்பு.