திரைத்துறையிலும் அலுவலக நேரம் போல வேலை அமைய வேண்டும்: ராஷ்மிகா மந்தனா ஆசை
ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில் ராஷ்மிகா மந்தனா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த ‘த கேர்ள்ஃபிரண்ட்’ படம் நவம்பர் 7-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. ரோகிணி, தீக்ஷித் ஷெட்டி, அனு இம்மானுவேல் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராஷ்மிகா, திரைப்படத்துறையில் அலுவலக பணிநேரம் போல ஒரு நிர்ணயிக்கப்பட்ட வேலை நேரம் இருக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை பகிர்ந்துள்ளார்.
சமீபத்தில் தீபிகா படுகோன் 8 மணி நேர வேலை நேரம் மற்றும் தனது பணிக்குழுவுக்கான சிறப்பு வசதிகள் போன்ற நிபந்தனைகளை வைத்ததால், ‘ஸ்பிரிட்’, ‘கல்கி 2898 ஏடி–2’ படங்களில் இருந்து விலகினார் என்பது தெரியவந்தது. இதுவே சினிமா துறையில் வேலை நேரம் குறித்த விவாதத்துக்குப் பின்புலமாக அமைந்தது.
இதைப் பற்றிய கேள்விக்கு பதிலளித்த ராஷ்மிகா கூறுகையில்:
“அதிக நேரம் வேலை செய்வது பெருமை செய்யும் விஷயமில்லை. நானும் அப்படி பல நேரங்களில் வேலை செய்கிறேன். எவ்வளவு பிஸியாக இருந்தாலும், உடல் நலம், தூக்கம், மன அமைதி முக்கியம். நடிகர்களும் மனிதர்கள்தான் — அவர்களுக்கும் ஓய்வு தேவை.
எனக்கு வாய்ப்பு கிடைத்தால், 9 மணி முதல் 6 மணி வரை மட்டுமே வேலை செய்ய விரும்புகிறேன். என் குடும்பத்துடன் நேரம் செலவிட வேண்டும். குடும்ப வாழ்க்கைக்குப் பெருமதிப்பு கொடுக்கிறேன். சரியான தூக்கம், உடற்பயிற்சி—இவை எனக்குத் தேவையானவை. ஒரு நாள் தாயானால், வேலை-வாழ்க்கை சமநிலை எப்படி இருக்கும் என்று நான் இப்போது கூட கற்பனை செய்ய முடியவில்லை,” என்றார்.