அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையானை கட்சியில் இருந்து நீக்குவதில் எந்த தயக்கமும் இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெளிவாக கூறினார்.
ராமநாதபுரத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து வணங்கிய அவர், பின்னர் மதுரை கப்பலூர் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் முறையாக கொள்முதல் செய்யப்படாததால் மழையால் மூட்டைகளில் இருந்த நெல் முளைத்தது. இதை சட்டப்பேரவையில் முன்வைத்து, கொள்முதல் மையங்களுக்கு நேரில்சென்று விவசாயிகளிடம் நிலைமையை கேட்டபோது, பல நாட்களாக நெல் குவியலாக கிடந்தும் கொள்முதல் வேகம் குறைவாக இருந்தது தெரியவந்தது. இதை எடுத்துக்கூறினால் அவதூறு என கூறுவது தவறு.
தஞ்சாவூரில் துணை முதல்வர் விவசாயிகளைச் சந்திக்காமல் ரயில் மூலம் செல்லும் நெல் மூட்டைகளையே பார்ப்பது வருத்தம் அளிக்கிறது.
நெல் கொள்முதல் தொடர்பாக அரசு கொடுத்துள்ள தகவலில், திமுக ஆட்சியில் மொத்த கொள்முதல் கணக்குகள், முதல்வர் கூறும் எண்களுடன் பொருந்தவில்லை.
அதேபோல், பள்ளிக்கரணை சதுப்புநில பாதுகாப்பு திட்டத்தை அதிமுக ஆட்சியில் தொடங்கியிருந்தும், தற்போது அந்தப்பகுதியில் ஆக்கிரமிப்பும் ஊழலும் நடக்கிறது.
மரணமடைந்தவர்கள், முகவரி மாற்றியவர்கள் ஆகியோரின் வாக்குகளை நீக்குவது சரியான நடைமுறையே. இது தேர்தல் முறையை சீர்செய்ய உதவும். அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்ற பயத்தால் திமுக இதை எதிர்க்கிறது.
செங்கோட்டையன், டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோர் சேர்ந்து பேசுவது பயனற்றது. முன்னர் இவர்கள் செய்தது போன்ற துரோகம் காரணமாகத்தான் அதிமுக பாதிக்கப்பட்டது. தலைவர் முடிவை மதிக்காதவர் யாராயினும் கட்சியில் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே செங்கோட்டையனை நீக்குவதில் எந்த தயக்கமும் இல்லை.
துரோகிகள் தற்போது வெளிப்படையாகத் தெரிகின்றனர். அவர்களை அகற்றிய பின் அதிமுக வலிமையாக வளரும் என அவர் கூறினார்.