என் நடவடிக்கைகள் தனிப்பட்டவை, ஆனால் வெற்றி உறுதி: சசிகலா
அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் சசிகலா, “என்னுடைய அரசியல் நடவடிக்கைகள் தனியாக இருக்கலாம்; ஆனால் அதன் முடிவு வெற்றியாகத்தான் இருக்கும்” என மதுரையில் செய்தியாளர்களிடம் கூறினார்.
மதுரையில் ஊடகங்களைச் சந்தித்த அவர், தமிழ்நாட்டில் கடந்த 10 மாதங்களில் கொலைச் சம்பவங்கள் அதிகரித்து சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பள்ளி மாணவர்களுக்கே போதைப்பொருள் எளிதில் சென்றடைவது திமுக ஆட்சியின் தவறான நிர்வாகத்தைக் காட்டுவதாகவும் தெரிவித்தார். “இந்த அரசு நீங்கினால்தான் மக்களுக்கு நிம்மதி” என்றார்.
அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வருவதை நோக்கி தாம் வேலை செய்து வருவதாகவும், “நான் சொல்லிக்கொண்டே இருப்பதில்லை, சமயம் வந்தால் எல்லாம் ‘சர்ப்ரைஸ்’ ஆக நடக்கும். நான் என்ன செய்கிறேன் என்பது தேர்தலே நிரூபிக்கும்” என வலியுறுத்தினார்.
நகராட்சி பணியாளர் நியமனத்தில் முறைகேடு குற்றச்சாட்டு குறித்து அவர், “உண்மை இருந்தால் அது வெளிவரும். தொண்டர்களுக்காகத்தான் என் செயல்கள்; நான் வெற்றியடைவதைப் பாருங்கள்” என்றார்.
மாநிலத்தில் 22 பல்கலைக்கழகங்களில் 14-க்கு துணைவேந்தர்கள் இல்லாத நிலையை ஊடகங்கள் கேள்விக்கிடத்தாதது ஏன்? என்று அவர் கேள்வி எழுப்பினார். “ஜெயலலிதா உருவாக்கிய அம்பேத்கர் சட்டப் பல்கலைத்திலும் துணைவேந்தர் இல்லை” எனவும் கூறினார்.
தன்னைப் பார்க்க வரும் தொண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்றும், பள்ளிக்கரணை சதுப்புநிலத்தில் கட்டிடங்களுக்கு அனுமதி வழங்கியதை ரத்து செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.
1987-ல் எம்ஜிஆர் மறைவிலிருந்து கட்சிக்காக செயல்பட்டதாகவும், இரண்டாவது முறையாக வந்துள்ள அதிமுக பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்கும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். “அரசியலில் பழிவாங்கும் குணம் எனக்கு இல்லை. 1987 முதல் நான் எப்படி செயல்படுகிறேன் என்பதை சீனியர்கள் அறிவார்கள்” என்றார்.
ஜெயலலிதா காலத்தில் கட்சியை ஒன்றிணைத்தது தானே என்றார். “என்னை எதிர்த்தவர்களையே பின்னர் பதவி கொடுத்தோம். எனவே என் ஒவ்வொரு முடிவும் தனியானது; ஆனால் முடிவு வெற்றி தான்” என்று சசிகலா தெளிவுபடுத்தினார்.