70 நாட்கள் தேங்கிய மழைநீர் அகற்றம்: 5 மணி நேரம் நேரில் கண்காணித்த கும்பகோணம் எம்.எல்.ஏ.
கும்பகோணத்தில் கடந்த 70 நாட்களாக தேங்கியிருந்த மழைநீர் பல்வேறு காரணங்களால் வடியாமல் இருந்ததால், அங்கு நேரில் சென்று சுமார் 5 மணி நேரம் கண்காணித்து நீர் வடிகால் பணிகளை முடிக்கச் செய்துள்ளார் கும்பகோணம் தொகுதி எம்.எல்.ஏ. சாக்கோட்டை க. அன்பழகன்.
ஆகஸ்ட் 19-ம் தேதி பெய்த கனமழையால் சோலையப்பன் தெரு, ஆலையடி சாலை உள்ளிட்ட பகுதிகளில் நீர் தேங்கியது. அதன்பின் மீண்டும் பெய்த மழையுடன் நீர்மட்டம் 3 அடி உயரத்திற்கு அதிகரித்தது. இதனால் விவசாயப் பயிர்கள் சேதமடைந்ததோடு, குடியிருப்பு பகுதிகள் நீரில் சூழப்பட்டு மக்களுக்கு பெரும் அவதியையும் ஏற்படுத்தியது.
நீர் வடிகாலுக்கான நடவடிக்கைகள் பல மேற்கொள்ளப்பட்டும், நிலைமை மாறாத நிலையில் விவசாயிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர்.
இந்நிலையில், இன்று (அக். 30) காலை 9.30 மணிக்கு எம்.எல்.ஏ. அன்பழகன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நீர் தேங்கிய பகுதிக்கு சென்று, உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மேலும், பணிகள் முடியும் வரை அங்கிருந்து செல்லமாட்டேன் என தெரிவித்து நேரிலேயே அமர்ந்து கண்காணித்தார்.
பின்னர் பெக்லைன் மெஷின் மூலம் சாலை பள்ளங்களைத் தோண்டு, மதியம் 2.30 மணியளவில் நீரை வடிக்கச் செய்தனர். தொடர்ந்து எம்.எல்.ஏ. அங்கிருந்து திரும்பினார். இந்த முயற்சிக்கு உள்ளூர் மக்கள் நன்றி தெரிவித்தனர்.
பழமையான வரைபடங்களை அடிப்படையாகக் கொண்டு எள்ளுக்குட்டை வாய்க்காலை மீட்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, ரெட்டிராயர்குளத்துக்கு நீர் செல்லும் பாதை சுத்தம் செய்யப்பட்டதாகவும், குளம் நிரம்பினால் காவிரி நதிக்கு நீர் செல்லும் வகையில் நிரந்தர தீர்வு செய்யப்படுகிறதாகவும் எம்.எல்.ஏ. தெரிவித்தார். மேலும், 2 நாட்களுக்குள் முழு நீரும் வடியும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.