பயோமெட்ரிக் மூலம் யுபிஐ பரிவர்த்தனை – புதன்கிழமை தொடக்கமா?
இந்தியாவில் யுபிஐ பரிவர்த்தனைகளை இன்னும் பாதுகாப்பான மற்றும் எளிய முறையில் செய்ய, பயோமெட்ரிக் அங்கீகாரத்தை பயன்படுத்தும் வசதி இந்தப் புதன்கிழமையே அறிமுகமாகும் என செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் நொடி நேரத்திலேயே பண பரிவர்த்தனை செய்ய உதவும் யுபிஐ முறையை பொதுமக்களிருந்து பெரிய வணிகர்கள் வரை அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். நகரம் முதல் கிராமம் வரை பரவலாக பயன்படுத்தப்படும் இந்த சேவையால், ரொக்கப் பணத்தின் தேவை கணிசமாக குறைந்துள்ளது.
கூகுள் பே, போன் பே, பேடிஎம், அமேசான் பே, BHIM போன்ற செயலிகளின் மூலம் தினசரி கோடிக்கணக்கான யுபிஐ பரிவர்த்தனைகள் நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து இதன் பயனர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், யுபிஐ பரிவர்த்தனைகளை மேலும் எளிமைப்படுத்த அரசு, தன்னிடம் உள்ள பயோமெட்ரிக் தரவுகளைப் பயன்படுத்தி புதிய அங்கீகார முறையை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, விரல் ரேகை (Fingerprint) மற்றும் முகத் தன்மை அறிதல் (Facial Recognition) மூலம் பயனர்கள் இனி யுபிஐ பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும் என கூறப்படுகிறது.
இப்போது யுபிஐ பரிவர்த்தனை செய்ய பின் நம்பரை உள்ளிட வேண்டும். ஆனால் பயோமெட்ரிக் முறை அறிமுகமானால், இன்னும் வேகமாகவும் சுலபமாகவும் பரிவர்த்தனை முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.