மதுரையில் ஓபிஎஸுடன் செங்கோட்டையன் ரகசிய சந்திப்பு – ஒரே காரில் பசும்பொன் பயணம்; அதிமுக வட்டாரத்தில் அதிர்ச்சி
அதிமுகவில் அதிருப்தியில் இருந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், மதுரையில் திடீரென ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆலோசனை நடத்தியதுடன், இருவரும் ஒரே காரில் பசும்பொன் நோக்கி புறப்பட்டுச் சென்றது அரசியல் சூழலை சூடுபடுத்தியுள்ளது. இது, கே.பழனிசாமிக்கு எதிரான அதிமுக பிரிவுகள் ஒன்றிணையக் கூடும் என்கிற ஊகங்களைத் தூண்டியுள்ளது.
அதிமுக வரலாற்றில் ஜெயலலிதா காலம் வரை முக்கிய செல்வாக்கு கொண்டவராக விளங்கிய செங்கோட்டையன், பல முறை ஒதுக்கப்பட்டாலும் கட்சி நம்பிக்கையை விட்டு செல்லாதவர். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, சசிகலா பழனிசாமியை முதல்வராக்கியபோது மீண்டும் அமைச்சராக சேர்க்கப்பட்டவர். பின்னர் சசிகலா, தினகரன், ஓபிஎஸ் ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டபோதும் அவர் பழனிசாமி அணியிலேயே இருந்தார்.
சமீபத்தில் பிரிந்து சென்ற அதிமுக தலைவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என வலியுறுத்திய செங்கோட்டையனுக்கு எதிராக பழனிசாமி நடவடிக்கை எடுத்து, அவரிடம் இருந்த கட்சிப் பொறுப்புகள் நீக்கப்பட்டன. அதன்பின் அமைதியாக இருந்த செங்கோட்டையன், இன்று மதுரையில் ஓபிஎஸ் தங்கியிருந்த ஹோட்டலில் சென்று கலந்துரையாடினார். பின்னர் இருவரும் ஒரே காரில் பசும்பொனுக்கு சென்றனர்.
இந்த முன்னேற்றம் அதிமுகவுக்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓபிஎஸ், தினகரன் மற்றும் சசிகலா மீண்டும் கூட்டணியில் சேர்ந்து பழனிசாமிக்கு எதிராக செயல்படுகிறார்கள் என்ற பேச்சுக்கு இது வலுவூட்டுகிறது. அதேசமயம், தவெக கடந்த நிலைப்பாட்டிலேயே உள்ளதாக சிடி.நிர்மல் குமார் கருத்து தெரிவித்ததால், அவர்கள் பாஜக–அதிமுக கூட்டணிக்கு வர வாய்ப்பு குறைவு என சொல்லப்படுகிறது.
இந்நிலையில், பழனிசாமி ஆதரவாளர்கள் செங்கோட்டையனை கட்சியில் இருந்து உறுப்பினர் நிலை அளவிலும் நீக்க ஆலோசனை நடத்தி வருவதாக தகவல். இதுகுறித்து பழனிசாமி விரைவில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் தரலாம் என்று கூறப்படுகிறது.