பள்ளிக்கரணை சதுப்புநில விவகாரம்: ரூ.2,000 கோடி திட்ட அனுமதிக்கு எதிர்ப்பு – பாமக, பாஜக குற்றச்சாட்டு
சென்னை பள்ளிக்கரணை ராம்சார் சதுப்புநில எல்லைக்குள் ரூ.2,000 கோடி மதிப்பில் 1,250 அடுக்குமாடி குடியிருப்புகள் அமைக்கும் திட்டத்திற்கு அரசு அனுமதி வழங்கியிருப்பது திட்டமிட்ட ஊழல் என்று பாமகவும் பாஜகவும் குற்றம் சாட்டியுள்ளன.
பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கையில்,
“உலகளவில் பாதுகாக்கப்படும் ராம்சார் தளமாக உள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கட்டுமானத்திற்கு அனுமதி வழங்கியிருப்பது அதிர்ச்சி. இதுகுறித்து அரசின் விளக்கம் கூட இதில் சதி நடந்ததைக் காட்டுகிறது.
சதுப்பு நிலங்களை காக்க வேண்டிய அரசு கட்டுமான நிறுவனங்களுக்கு ஆதரவளிப்பது கண்டிக்கத்தக்கது. ராம்சார் விதிகளின்படி அத்தகைய பகுதிகளில் கட்டுமானம் தடை. இருந்தும் சிஎம்டிஏ, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி அளித்திருப்பது சந்தேகத்துக்குரியது.
பள்ளிக்கரணை சதுப்புநில அனுமதி ரத்து செய்யப்பட வேண்டும்; மேலும் இதை சென்னை உயர் நீதிமன்ற கண்காணிப்பில் விசாரிக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.
தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் கூறியதாவது:
“சதுப்புநில எல்லைக்கு வெளியே என 1,359 ஏக்கர் நிலத்தை அடையாளப்படுத்தி அனுமதி வழங்கியதில் வனத்துறை, சுற்றுச்சூழல் துறை, சிஎம்டிஏ அனைத்திலும் விதிமீறல் மற்றும் ஊழல் நடந்திருப்பது தெளிவு.
தமிழகத்தில் சதுப்புநில பாதுகாப்பு மற்றும் மீட்புக்கான ஆணையத்தை உருவாக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.