சிக்கனத்தை கடைபிடித்து அஞ்சலகத்தில் சேமிக்க வேண்டுகோள்: உலக சிக்கன தினத்தில் முதல்வர் & நிதியமைச்சர் பேச்சு
இன்று (அக்டோபர் 30) அனுசரிக்கப்படும் உலக சிக்கன தினத்தை முன்னிட்டு, வருமானத்தை முன்கூட்டியே திட்டமிட்டு சிக்கனமாக செலவிட்டு, அஞ்சலகங்களில் சேமிப்பை மேற்கொள்ள வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலினும், நிதியமைச்சர் தங்கம் தென்னரசும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட செய்தியில், ஒவ்வொருவரும் தமது வருவாயில் இருந்து ஒரு பகுதியை பாதுகாப்பான முறையில் சேமிக்க வேண்டும் என வலியுறுத்தினார். “சேமிப்பு நமக்கு முதுமையிலும் நம்பிக்கை, பாதுகாப்பு என்ற இரண்டையும் அளிக்கிறது. தினசரி சிறுதொகை சேர்த்தாலும், எதிர்பாராத அவசரங்களுக்கு இது பெரும் ஆதரவாக இருக்கும். ஆகவே வரவுக்குள் செலவு செய்து சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டும். அருகிலுள்ள அஞ்சலகத்தில் சேமிப்புக் கணக்கைத் தொடங்கி தொடர்ந்து சேமிக்க அனைவரும் பழக வேண்டும்” என்றார்.
இதனை தொடர்ந்து நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, “வருமானத்தைப் பெற்ற தினமே முதலில் செய்ய வேண்டியது சேமிப்பே. சிக்கனத்தால் தான் உறுதியான சேமிப்பு உருவாகும். நிதி சுயநிறைவு பெற சிக்கனமும் சேமிப்பும் அவசியம். அருகிலுள்ள அஞ்சலகத்தில் தொடர்ச்சியான சிறுசேமிப்பு கணக்கைத் தொடங்க வேண்டும்” என தெரிவித்தார்.