பிரதமர் நரேந்திர மோடி வலிமையான தலைவர்: தென்கொரியாவில் ட்ரம்ப் புகழாரம்
பிரதமர் நரேந்திர மோடி வலுவான மற்றும் திறமைமிக்க தலைவர்; அவரை மிகுந்த மதிப்புடன் பார்க்கிறேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், தாமதமாகி வரும் இந்தியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என்பதும் அவர் கூறினார்.
இந்தியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நீண்டநாள் நிலுவையில் உள்ளது. ரஷ்யாவிலிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கியதைத் தொடர்ந்து, அமெரிக்கா 50% சுங்க வரி விதித்தது. அதேசமயம், அமெரிக்க விவசாயப் பொருட்களான சோளம், சோயாபீன்ஸ் ஆகியவற்றை இந்தியா இறக்குமதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் அமெரிக்கா வைத்துள்ளது. இந்திய விவசாயிகளின் நலனை கவனத்தில்கொண்டு, அத்தகைய நிபந்தனையை ஏற்க முடியாது என்று இந்திய அரசு தெரிவித்ததால் ஒப்பந்தம் தாமதிக்கிறது.
சமீபத்தில் மோடி–ட்ரம்ப் இடையே தொலைபேசி உரையாடல் நடந்தது. ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை இந்தியா குறைக்க ஒப்பந்தத்திற்கு பிறகு, இறக்குமதி வரியை 16% ஆக குறைக்க அமெரிக்கா சம்மதித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆசிய பயணத்தின் ஒரு பகுதியாக ட்ரம்ப் தென்கொரியா சென்றபோது, ஆசியா–பசிபிக் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் அவர் பேசும்போது, “மோடி ஒரு மிகச் சிறந்த மனிதர். உறுதியான தலைவர். அவரை சம்மதிக்க வைப்பது சற்றே கடினம், ஆனால் நாங்கள் சிறப்பாக முயற்சித்து வருகிறோம். இந்தியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் விரைவில் நிறைவேறும்,” என்றார்.
இந்தியா–பாகிஸ்தான் பிரச்சினை குறித்து ட்ரம்ப் கருத்து
“இந்தியா, பாகிஸ்தான் இருநாடுகளுடனும் அமெரிக்கா வர்த்தக பேச்சுவார்த்தையில் உள்ளது. இரண்டு நாடுகளும் மோதியபோது, நான் பிரதமர் மோடியிடம், ‘போர் நடந்தால் வர்த்தக ஒப்பந்தம் சாத்தியமில்லை’ என்று தெரிவித்தேன். அதேபோல் பாகிஸ்தான் பிரதமருடனும் பேசினேன். 250% சுங்கம் விதிப்பேன் என எச்சரித்த பிறகு, 48 மணிநேரத்தில் இருநாடுகளும் தற்காலிக சமாதானத்திற்கு வந்து, 7 விமான இழப்பு நடந்த போரும் நிறுத்தப்பட்டது. என் தலையீடு காரணமாக கோடிக்கணக்கானோர் உயிர் காக்கப்பட்டனர்,” என ட்ரம்ப் கூறினார்.
இந்தியா–பாகிஸ்தான் போர்நிறுத்தம் குறித்து அமெரிக்கா பலமுறை தலையிட்டதாக ட்ரம்ப் கூறியுள்ள நிலையில், அமெரிக்க தலையீடு இல்லை; பாகிஸ்தான் ராணுவத்தின் கோரிக்கையின்பேரில் தீர்மானம் எடுக்கப்பட்டது என இந்தியா தொடர்ந்து தெரிவித்துவருகிறது.