வானிலை முன்னறிவிப்பு: நவம்பர் 4 வரை தமிழகத்தில் கனமழை இல்லை
தமிழகத்தில் இன்று முதல் நவம்பர் 4 வரை கனமழை ஏற்படும் வாய்ப்பு இல்லை என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மத்திய கிழக்கு அரபிக்கடல் பக்கங்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீடிக்கிறது. இதன் தாக்கமாக இன்று (அக்.30) தமிழகத்தின் சில பகுதிகளில் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதேபோல் அக்டோபர் 31 முதல் நவம்பர் 4 வரை மாநிலத்தின் சில பகுதிகளில் சிறிய முதல் மிதமான மழை பெய்யலாம். ஆனால் கனமழை பெய்யும் வாய்ப்பு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் அதன் புறநகர பகுதிகளில் இன்று வானம் பகுதியளவில் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை ஏற்படும். கடலோர பகுதிகளில் மீனவர்களுக்கு எந்தவித எச்சரிக்கையும் இல்லை.
கடைசி 24 மணி நேரத்தில் (இன்று காலை 8.30 மணி வரையிலான தகவல்):
- திருநெல்வேலி நாலுமுக்கில் அதிகபட்சமாக 7 செ.மீ
- நீலகிரி அவலாஞ்சில் 6 செ.மீ
- திருநெல்வேலி ஊத்து மற்றும் கோவை சின்னக்கல்லாரில் தலா 5 செ.மீ
- திருநெல்வேலி காக்காச்சி, மாஞ்சோலை, கோவை சிறுவாணி அடிவாரம், திருவள்ளூர் ஊத்துக்கோட்டை, வேலூர் விரிஞ்சிபுரம், நீலகிரி கூடலூர் சந்தை ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது.