சி.பி.ஆர். பாதுகாப்பு குறைபாடு: போலீஸ் விளக்கத்தில் உடன்பாடு இல்லை — வானதி சீனிவாசன்
கோவை: குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் பாதுகாப்பு வளையத்திற்குள் இளைஞர்கள் நுழைந்த சம்பவம் குறித்து காவல்துறை அளித்த விளக்கத்தில் தாங்கள் உடன்படவில்லை என்று பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
கோவை சாய்பாபா காலனி சாலையோர வியாபாரிகள் சங்கம் சார்பில் இன்று நடைபெற்ற அடையாள அட்டைகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அவர் கூறியதாவது:
“பிரதமர் நரேந்திர மோடி, கரோனா காலத்தில் சாலையோர வியாபாரிகளுக்காக ‘ஸ்வநிதி’ திட்டத்தை அறிமுகப்படுத்தினார். எந்த பிணையும் இல்லாமல் 10 ஆயிரம் ரூபாயிலிருந்து தொடங்கி 50 ஆயிரம் ரூபாய் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. இதன் கீழ் அதிக பயனாளிகள் உள்ள மாநிலம் தமிழ்நாடு தான்.”
அவர் மேலும் தெரிவித்ததாவது:
“குடியரசு துணைத் தலைவர் கோவையில் காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கச் சென்றபோது, பாதுகாப்பு வளையத்திற்குள் இரண்டு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் நுழைந்தனர். இது மிகுந்த பாதுகாப்பு குறைபாடாகும். காவல்துறை விளக்கத்தில், அவர்கள் மதுபோதையில் இருந்ததாக கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த விளக்கத்தை எங்கள் கட்சி ஏற்கவில்லை.”
வானதி சீனிவாசன் மேலும் கூறினார்:
“இச்சம்பவம் நடந்த இடம் இதற்கு முன்பு குண்டுவெடிப்பு சம்பவம் நடந்த பகுதிக்கு அருகே அமைந்துள்ளது. எனவே, குடியரசு துணைத் தலைவரின் பாதுகாப்பில் குறை ஏற்பட்டது மிகவும் கவலைக்குரியது. திராவிட மாடல் அரசின் செயல்பாட்டில் நம்பிக்கை குறைந்திருக்கிறது.
கோவையில் நடந்த கார் வெடிகுண்டு சம்பவத்தை கூட சிலிண்டர் வெடியாகக் கூறிய அரசு, இச்சம்பவத்தையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. தீவிரமான விசாரணை நடத்தப்பட வேண்டும். தேவைப்பட்டால் மத்திய அரசின் தலையீடு கோரப்படும்.”