வாக்காளர் பட்டியல் சீர்திருத்தத்தில் பல லட்சம் பேர் நீக்கப்படலாம்: எம்.பி. மாணிக்கம் தாகூர் குற்றச்சாட்டு
விருதுநகர்: வாக்காளர் பட்டியல் சீர்திருத்த நடவடிக்கையின் பெயரில் தமிழகத்தில் பல லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் குற்றம்சாட்டியுள்ளார்.
விருதுநகரில் உள்ள மத்திய சேமிப்பு கிடங்கில் இன்று (அக்.29) ஆய்வு மேற்கொண்ட அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, “இந்த கிடங்கு 1961ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது 5.5 ஏக்கர் பரப்பளவில் இயங்கி வருகிறது. சுமார் 21,254 மெட்ரிக் டன் அரிசி இங்கு சேமித்து வைக்கப்பட்டுள்ளது.
இங்கிருந்து அரசின் ரேஷன் கடைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. 2022 முதல் முழு கொள்ளளவிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தொழிலாளர்களுக்கு பணி பற்றாக்குறை இருப்பதாக கூறியுள்ளனர்; இதை அரசு அதிகாரிகள் தீர்க்க நடவடிக்கை எடுப்பார்கள்,” என்றார்.
அவர் மேலும் கூறியதாவது:
“தெலங்கானா, ஆந்திரா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலிருந்து வரும் அரிசி மூட்டைகள் இங்கு சேமிக்கப்படுகின்றன. மாதந்தோறும் தூத்துக்குடியிலிருந்து இந்திய உணவுக் கழக அதிகாரிகள் குழுவும் ஆய்வுக்கு வருகிறார்கள். நெல் கொள்முதல் வேகமாக நடைபெறுவதற்காக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில் தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது.
கரூர் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களை நாங்கள் நேரடியாகச் சந்தித்து ஆறுதல் கூறினோம். விஜய் அவரவரது முறையில் ஆறுதல் கூறுகிறார்; அதில் எந்தத் தவறும் இல்லை.
ஆனால் வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம் குறித்துப் பேசும்போது — இது வழக்கமாக ஆண்டுதோறும் ஜனவரியில் நடக்கும். ஆனால் இம்முறை அனைத்து வாக்காளர்களும் ‘உறுதிப்படிவம்’ வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. விவசாய காலத்தில் இந்த அவசர நடவடிக்கை தேவையில்லை. படிவம் வழங்காதவர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்குவது சரியல்ல.
இதனால் சுமார் 30 முதல் 40 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதனால் ஏழை, எளியோர், அன்றாட கூலித் தொழிலாளர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். இதை அதிமுக தலைவர் பழனிசாமி ஆதரிப்பது வருத்தமாக உள்ளது.
இந்த நடவடிக்கை அமித்ஷாவின் தலையீட்டால் மேற்கொள்ளப்படுவதாக தெரிகிறது. அக்டோபர் 6 முதல் டிசம்பர் 6க்குள் படிவம் அளிக்காதவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படும். பீஹாரில் இதே நடைமுறையால் 62 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
அந்தச் சதி தமிழகத்தில் வெற்றி பெறாது. தமிழக மக்கள் ஜனநாயகத்தையும் வாக்குரிமையையும் காக்க உறுதியுடன் நிற்பார்கள்,” என மாணிக்கம் தாகூர் வலியுறுத்தினார்.