ஈரானுடன் அமைதிப் பேச்சுவார்த்தையில் திடீர் திருப்பம்: திட்டமிடப்பட்ட வான்வழித் தாக்குதலை அதிரடியாக நிறுத்த உத்தரவிட்டார் அதிபர் ட்ரம்ப!
ஈரானுடனான பலமாத காலப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் நடத்தப்பட்டு வரும் அமைதி ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் மிக முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அந்நாட்டின் மீது இன்று இரவு நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த அனைத்து விதமான கடுமையான வான்வழி மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களையும் உடனடியாக நிறுத்துமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாகத் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “ஈரான் நாட்டின் மிக உயர்மட்டத் தலைவர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் முக்கிய உடன்பாடுகள் எட்டப்பட்டு, அவை அங்கீகரிக்கப்பட்டுள்ளன; இதன் அடிப்படையில் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் இன்று இரவு ஈரான் மீது நடத்தவிருந்த திட்டமிட்ட குண்டுவீச்சுத் தாக்குதல்கள் முற்றிலும் ரத்து செய்யப்படுகின்றன” என அதிரடியாக அறிவித்துள்ளார். அமெரிக்கா – ஈரான் இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டி, எந்த நேரமும் முழு அளவிலான போர் வெடிக்கலாம் என்ற சூழலில் ட்ரம்பின் இந்த பின்வாங்கல் சர்வதேச அளவில் பெரும் உற்றுநோக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றம் இன்னும் முழுமையாகத் தணியவில்லை என்றே பாதுகாப்பு வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக, உலகக் கச்சா எண்ணெய் போக்குவரத்தின் மிக முக்கிய நரம்பாகத் திகழும் ‘ஹோர்முஸ் நீரிணை’ (Strait of Hormuz) பகுதியை முழுமையாக மூடுவதாக ஈரான் ராணுவம் அறிவித்திருப்பது சர்வதேசச் சந்தையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகின் ஐந்தில் ஒரு பங்கு கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு இந்த குறுகிய கடல் வழித்தடம் வழியாகவே கொண்டு செல்லப்படும் நிலையில், ஈரானின் இந்த பிடிவாதமான முடிவு உலகளாவிய எரிபொருள் விநியோகச் சங்கிலியைப் பெரிதும் பாதிக்கும் என்ற கவலை நீடிக்கிறது.
ஆயினும், கத்தார் மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளின் தீவிர தூதரக முயற்சியால் இருதரப்புக்கும் இடையேயான ஒரு சுமுகமான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும், இன்னும் ஓரிரு நாட்களில் ஐரோப்பாவில் வைத்து இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக கையெழுத்தாக வாய்ப்புள்ளதாகவும் அதிபர் ட்ரம்ப் மிகவும் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.






