“பாகிஸ்தான் குடைச்சல் தந்தால் ஆப்ரேஷன் சிந்துார் 2.0 நிச்சயம்!” – ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி அதிரடி எச்சரிக்கை!
இந்தியாவின் எல்லைப் பாதுகாப்பு மற்றும் ராணுவ பலம் குறித்து பாகிஸ்தானுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார் இந்திய ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி. மகாராஷ்டிர மாநிலம் புனேயில் உள்ள புகழ்பெற்ற தேசிய பாதுகாப்பு அகாடமியில் (NDA) நடைபெற்ற 150-வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசிய அவர், “இந்தியாவுக்குப் பாகிஸ்தான் தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வந்தால், அதற்குப் பதிலடியாக ‘ஆப்ரேஷன் சிந்துார் 2.0’ (Operation Sindhu-2.0) நடவடிக்கை நிச்சயம் பாயும்” என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய ராணுவத் தளபதி, எல்லையில் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட ‘ஆப்ரேஷன் சிந்துார்’ நடவடிக்கை இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை என்றும், தற்போது எல்லையில் நீடித்து வருவது வெறும் தற்காலிகப் போர் நிறுத்தம் (Ceasefire) மட்டும்தான் என்றும் தெளிவுபடுத்தினார். எந்நேரமும் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளும் வகையில் இந்திய ராணுவம் விழிப்புடன் இருப்பதை அவர் தனது பேச்சின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.
முப்படைகளும் தயார்: இந்தியாவின் முப்படைகளும் (ராணுவம், கடற்படை, விமானப்படை) அடுத்தகட்ட ‘ஆப்ரேஷன் சிந்துார் 2.0’ நடவடிக்கைக்கு முழு வீச்சில் தயாராகி வருகின்றன. அப்படி ஒரு ராணுவ நடவடிக்கைக்கான சூழல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது முழுக்க முழுக்க பாகிஸ்தானின் பொறுப்பே ஆகும்.
எல்லையில் அத்துமீறல்களையோ அல்லது தீவிரவாத ஊடுருவல்களையோ பாகிஸ்தான் மீண்டும் தூண்டிவிட்டால், இந்திய முப்படைகளின் கூட்டு அதிரடித் தாக்குதலைச் சந்திக்க நேரிடும் என்ற ராணுவத் தளபதியின் இந்த நேரடி எச்சரிக்கை, சர்வதேச பாதுகாப்பு வட்டாரத்தில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




