“கடந்த 12 ஆண்டுகால சாதனைகளைப் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்” – மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் மோடி அதிரடி அறிவுறுத்தல்!
புதுடெல்லி: ஐந்து நாடுகளுக்கான தனது அரசுமுறைச் சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு நேற்று நாடு திரும்பிய பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியில் மத்திய அமைச்சர்களுடன் ஒரு அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். சுமார் நான்கரை மணி நேரத்திற்கும் மேலாக மிக நீண்டதாக நீடித்த இந்த உயர் மட்டக் கூட்டத்தில், மேற்காசியப் போர்ச் சூழல் மற்றும் அதனால் உலகளவில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு சர்வதேச மற்றும் உள்நாட்டு முக்கியப் பிரச்சினைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் மத்திய அமைச்சர்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, “வளர்ச்சியடைந்த இந்தியா 2047 (Viksit Bharat 2047) என்பது வெறும் அரசியல் முழக்கம் மட்டுமல்ல, அது நமது அரசாங்கத்தின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு” என்று ஆணித்தரமாகத் தெரிவித்தார். மேலும், கடந்த 12 ஆண்டுகால மத்திய அரசின் வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனைகளையும் மக்கள் நலத்திட்டங்களையும் சாமானிய பொதுமக்களிடம் மிகத் தீவிரமாகக் கொண்டு சேர்க்க வேண்டும் என்று அமைச்சர்களுக்குப் பிரதமர் மோடி இதன்போது உத்தரவிட்டுள்ளார்.




