வடபழனி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா அக்டோபர் 21ல் தொடக்கம்; சூரசம்ஹாரம் 27ஆம் தேதி
சென்னை வடபழனி முருகன் கோயிலில் வருடாந்திர மகா கந்த சஷ்டி விழா அக்டோபர் 21ஆம் தேதி ஆரம்பமாகிறது. அன்றைய தினம் வரசித்தி விநாயகரின் மூஷிக வாகன புறப்பாட்டுடன் விழா தொடங்கும்.
22ஆம் தேதி முதல் மகா கந்த சஷ்டி லட்சார்ச்சனை தொடங்கவுள்ளது. மாலைகளில் யாகசாலை பூஜைகள் நடைபெறும். ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலை வேளைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று, விழா 27ஆம் தேதி உச்சிக்கால பூஜையுடன் நிறைவடைகிறது.
அத்துடன், 22 முதல் 27ஆம் தேதி வரை தினமும் இரவு சுவாமி மங்களகிரி விமானம், சந்திரபிரபை, ஆட்டுக்கிடா, நாக வாகனங்களில் வீதி உலா நடத்தப்படும்.
விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் அக்டோபர் 27ஆம் தேதி இரவு 8 மணிக்கு நடைபெறும். அப்போது முருகப்பெருமான் படையுடன் சூரபத்மனை யானை, சிங்கம், ஆடு போன்ற ரூபங்களில் தோன்றியவாறு வேலால் வதம் செய்வார்.
அதனைத் தொடர்ந்து, அக்டோபர் 28ஆம் தேதி இரவு 7 மணிக்கு வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர் திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். பின்னர் சுவாமி வீதி உலா மற்றும் இரவு 8 மணிக்கு திருக்கல்யாண விருந்து நடைபெறும்.
மேலும், அக்டோபர் 28 முதல் நவம்பர் 1 வரை தினமும் சுவாமி வீதி உலா நடைபெறுகிறது.
லட்சார்ச்சனையில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள், ஒவ்வொரு அர்ச்சனைக்கும் ரூ.250 செலுத்தி முருகனின் அருள்பெறலாம் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
விழா ஏற்பாடுகளை கோயில் தக்கார் எல்.ஆதிமூலம் மற்றும் செயல் அலுவலர் இரா.ஹரிஹரன் தலைமையில் நிர்வாகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.