முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடியாக அண்ணாமலை எழுப்பிய கேள்விகள்!
முதல்வர் மு.க. ஸ்டாலினின் சமீபத்திய சமூக வலைதள பதிவுக்கு பதிலளிக்கும் விதமாக, பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் தனது பதிவில் மத்திய அரசை குறிவைத்து பல கேள்விகளை எழுப்பியிருந்தார். அதில் ஊழல் குற்றச்சாட்டுகள், ஆளுநர் நடவடிக்கைகள், மத்திய அரசின் பெயரிடும் கொள்கைகள், அறிவியலுக்கு முரணான கருத்துகள், கீழடி அறிக்கை உள்ளிட்ட பல விஷயங்களை அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இதற்கு பதிலாக, அண்ணாமலை தனது சமூக வலைதளப் பதிவில், மாநில அரசின் நிர்வாக குறைபாடுகளை சுட்டிக்காட்டி பல கேள்விகளை முன்வைத்துள்ளார்.
அவர் எழுப்பிய முக்கியமான கேள்விகள்:
- 2023-24ம் ஆண்டுக்கான சிஏஜி அறிக்கையின்படி, 1,540 திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.14,808 கோடி நிதி பயன்படுத்தப்படாமல் இருப்பது ஏன்?
- அதே ஆண்டில் மக்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட ரூ.1,985 கோடி மின்சார வரிகளில், ரூ.507 கோடி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்துக்கு வழங்கப்படாமல் தாமதப்படுத்தியதன் காரணம் என்ன?
- ஜிஎஸ்டி இழப்பீடு தொகை ரூ.28,024 கோடி — இதிலிருந்து 10% தொகை உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்பது திட்டக்குழுவின் பரிந்துரை. அது வழங்கப்படாததற்கு காரணம் என்ன?
- திமுக 2021 தேர்தல் அறிக்கையில் 511 வாக்குறுதிகள் அளித்திருந்தது. அவற்றில் 10 சதவீதம் கூட நிறைவேற்றப்படாத நிலையில், 2026 தேர்தலை எவ்வாறு எதிர்கொள்கிறீர்கள்?
- ஆட்சிக்கு வருவதற்கு முன் கடன் சுமையை குறைப்போம் என கூறிய நிலையில், கடந்த நான்கு ஆண்டுகளில் சுமார் ரூ.5 லட்சம் கோடி புதிய கடன் எடுக்கப்பட்டதற்கான காரணம் என்ன?
அண்ணாமலை கூறியதாவது, “மாநில அரசு மத்திய அரசை குறை கூறுவதற்கு முன், தன்னுடைய நிர்வாக பொறுப்பை விளக்க வேண்டும்” என தெரிவித்தார்.