நீட் தேர்வு வினாத்தாள் கசிவு: தேசிய தேர்வுகள் முகமை அதிகாரிகளுக்கும் தொடர்பு – சிபிஐ பகீர் தகவல்!
புதுடெல்லி:
மருத்துவப் படிப்புகளுக்கான நீட் (NEET) தேர்வில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக, தேசிய தேர்வுகள் முகமை (NTA) அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக டெல்லி நீதிமன்றத்தில் சிபிஐ அதிரடித் தகவலைத் தெரிவித்துள்ளது.
கடந்த 3-ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வின் வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பாக, புனேவைச் சேர்ந்த 5 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். வினாத்தாள் கசிவு புகாரைத் தொடர்ந்து தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், இது தொடர்பான வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்தச் சம்பவம் குறித்து விரிவான தகவல்களைச் சமர்ப்பித்த சிபிஐ அதிகாரிகள், வினாத்தாள் கசிந்ததில் என்.டி.ஏ (NTA) உயர் அதிகாரிகளுக்குப் பங்கு இருப்பதைச் சுட்டிக்காட்டினர்.
மேலும், கைது செய்யப்பட்டவர்களின் வங்கிக் கணக்குகளைத் தீவிரமாக ஆய்வு செய்து வருவதாகவும், இந்த மோசடியில் வேறு ஏதேனும் அரசு அதிகாரிகளுக்குத் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் விசாரணை விரிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் உயர்மட்ட அதிகாரிகளின் தொடர்பு குறித்த தகவல் தற்போது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






