கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு விஜய்தான் காரணம் – சீமான் குற்றச்சாட்டு
கரூரில் 41 பேர் உயிரிழந்த நிகழ்வுக்குப் பிரதான காரணம் விஜய்தான் என நாம தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
“கரூரில் நடந்த விபத்தில் கூட்டம் கூடியதற்குக் காரணமானவர் மீது சிபிஐ எஃப்ஐஆர் பதிவு செய்யாதது ஏன்? யாரைப் பார்க்க மக்கள் கூடியார்கள் என்பது தெளிவாக உள்ளது. விஜய் அங்கு வரவில்லை என்றால் அந்த அளவிலான கூட்டம் ஏற்பட்டிருக்குமா? அப்படியிருக்க அவருக்கு இதில் எந்தப் பொறுப்பும் இல்லையா? தவறு செய்யாதவர் என்றால் முன்ஜாமீன் கேட்க வேண்டிய அவசியமே இல்லை,” என்றார்.
அவர் மேலும், “ஆதவ் அர்ஜுனா கூட்டணியில் சேர்ப்பதற்காக விஜய்மீது வழக்கு பதிவு செய்யவில்லை. விஜய் கூட்டணியில் சேரவில்லை என்றால் உடனே வழக்கு பதிவு செய்திருப்பார்கள். முதலில் விஜயின் நிகழ்ச்சி சேலத்தில் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் அது கரூருக்கு மாற்றப்பட்டதற்கான காரணம் என்ன? என்பதும் விசாரிக்கப்பட வேண்டியது,” எனக் குறிப்பிட்டார்.
சிபிஐ விசாரணை குறித்து பேசும் போது, “விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டதும், புஸ்ஸி ஆனந்த் முன்ஜாமீன் மனுவை வாபஸ் பெற்றார். இது சிபிஐ விஜயை பாதுகாக்கிறதா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. மக்கள் மனதில் மாற்றம் வந்தால் தான் உண்மையான நீதி கிடைக்கும்,” எனவும் சீமான் தெரிவித்தார்.
அவர் மேலும், “தேர்தல் முடிவுகள் ஆளும் கட்சிக்கே சாதகமாக இருக்கும் என்று யாரும் உறுதி சொல்ல முடியாது,” என்றும் கூறினார்.