மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல்: 142 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது!
294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலின் இரண்டாம் மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நாளை (ஏப்ரல் 29) நடைபெறவுள்ளது. முன்னதாக, கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற்ற முதற்கட்டத் தேர்தலில் 152 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. அந்தத் தேர்தலில் சுமார் 3.6 கோடி வாக்காளர்கள் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றிய நிலையில், தற்போது எஞ்சியுள்ள 142 தொகுதிகளுக்கு நாளை தேர்தல் நடைபெறுகிறது.
கொல்கத்தா உள்ளிட்ட முக்கியப் பகுதிகளை உள்ளடக்கிய இந்த இரண்டாம் கட்டத் தேர்தலில், முதலமைச்சர் மம்தா பானர்ஜி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி மோதும் பவானிப்பூர் தொகுதி உள்ளிட்ட நட்சத்திரத் தொகுதிகள் கவனத்தை ஈர்த்துள்ளன. இதற்காக 41,000-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தடையற்ற மற்றும் பாதுகாப்பான வாக்குப்பதிவை உறுதி செய்யத் தேர்தல் ஆணையம் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளதோடு, அனைத்து இடங்களிலும் இணையவழி கண்காணிப்புக்கும் (Webcasting) ஏற்பாடு செய்துள்ளது. இந்தத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடைபெறவுள்ளது.





