பஞ்சாப் அரசைக் கவிழ்க்க ராகவ் சதா ‘மெகா’ பிளான்? – 60 எம்.எல்.ஏ-க்களுடன் பாஜகவில் இணையத் திட்டம்!
சண்டிகர்: ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகி அதிரடியாக பாஜகவில் இணைந்த ராகவ் சதா, அடுத்த கட்டமாகப் பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி அரசைக் கவிழ்க்கும் மாபெரும் அரசியல் வியூகத்தில் இறங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
60 எம்.எல்.ஏ-க்களுக்கு வலை: பஞ்சாப் சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 117 இடங்களில், ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கு 92 எம்.எல்.ஏ-க்கள் உள்ளனர். இதில் 60-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ-க்களைத் தனது ஆதரவாளர்களாகத் திரட்டி, அவர்களை ஒட்டுமொத்தமாகப் பாஜகவில் இணைக்க ராகவ் சதா திட்டமிட்டு வருகிறார். இதற்காகச் சில நாட்களாகவே ரகசிய ஆலோசனைகள் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.
சட்டச் சிக்கலைத் தவிர்க்க வியூகம்: சட்டப்படி, ஒரு கட்சியின் மூன்றில் இரண்டு பங்கு (2/3) உறுப்பினர்கள் பிரிந்து சென்றால், அவர்கள் மீது ‘கட்சித் தாவல் தடைச் சட்டம்’ பாயாது.
- ஏற்கனவே மாநிலங்களவையில் 10 எம்.பி-க்களில் 7 பேரைத் (ராகவ் சதா உட்பட) திரட்டி ஆம் ஆத்மிக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
- அதே பாணியில், பஞ்சாப் சட்டசபையிலும் 62 எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் திரட்டினால், பகவந்த் மான் தலைமையிலான ஆட்சி கவிழ்ந்துவிடும்.
பகவந்த் மான் அரசுக்கு நெருக்கடி: பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தலைமையிலான அரசுக்கு இந்தத் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்களது எம்.எல்.ஏ-க்கள் பாஜக-வின் பக்கம் சாய்வதைத் தடுக்க, ஆம் ஆத்மி தலைமை தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளது.
அடுத்த முதல்வர் ராகவ் சாதாவா? பஞ்சாப் மாநிலத்தின் தற்போதைய அரசியல் சூழலில், 60 எம்.எல்.ஏ-க்களுடன் ஆட்சி மாற்றம் நடந்தால், பாஜக சார்பில் ராகவ் சதா முதலமைச்சராகத் தேர்வு செய்யப்படலாம் என்ற பேச்சும் அரசியல் வட்டாரத்தில் பலமாக அடிபடுகிறது.
மே 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளிவரும் நிலையில், பஞ்சாப் அரசியலில் ஏற்பட்டுள்ள இந்தத் திடீர் மாற்றத்தால் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பு நிலவுகிறது.






