வன்கொடுமை வழக்குகளில் பொய் சாட்சியத்துக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டப்பிரிவுக்கு எதிராக — மத்திய அரசு பதில் அளிக்க மதுரை ஐகோர்ட் உத்தரவு
வன்கொடுமை வழக்குகளில் பொய் சாட்சியம் அளிப்பவர்களுக்கு மரண தண்டனை வழங்கும் சட்டப்பிரிவை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு, மத்திய அரசு பதில் அளிக்க மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஷாஸிம் சாகர் தாக்கல் செய்த மனுவில், பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிரான கொடுமைகளைத் தடுக்கும் நோக்கில் 1989-ல் நாடாளுமன்றம் “வன்கொடுமை தடுப்பு சட்டம்” (SC/ST Act) இயற்றியதாகவும், இதில் உள்ள 3(2)(i) பிரிவு படி, எஸ்சி/எஸ்டி சமூகத்தைச் சாராத நபர் வன்கொடுமை வழக்கில் பொய் சாட்சியம் அளித்தால், அவருக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கப்படலாம் என குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறினார்.
இந்தியாவில் மரண தண்டனை மிக அரிதான, தீவிரமான வழக்குகளில் மட்டுமே வழங்கப்படுகிறது. குடிமக்களின் அடிப்படை உரிமைகளை உறுதி செய்ய அரசியலமைப்பின் 32வது பிரிவு நீதிமன்றங்களுக்கு மறுபரிசீலனை அதிகாரம் அளிக்கிறது. எனவே, அந்தச் சட்டப்பிரிவு அரசியலமைப்புக்கு முரணானது என்றும், அதை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும் மனுதாரர் கோரினார்.
இந்த மனு, நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் குமரப்பன் அமர்வில் விசாரிக்கப்பட்டது. வழக்கறிஞர் ஜெகன் தரப்பில், மனுவை தள்ளுபடி செய்ய இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதேசமயம், மத்திய அரசு பதில் அளிக்க கால அவகாசம் கோரியது.
இதனைத் தொடர்ந்து நீதிபதிகள், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் செயலரும், மத்திய சட்ட அமைச்சகத்தின் செயலரும் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். வழக்கு அடுத்த தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.