தோல்வி பயத்தால் முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
தோல்வி அடையும் அச்சத்தால் முதல்வர் மு.க. ஸ்டாலின் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்தை எதிர்க்கிறார் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெற்ற பாஜக நிர்வாகி இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
“வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகள் நேரு காலத்திலிருந்தே நடைமுறையில் உள்ளன. ஆனால் தற்போது, தோல்வி பயத்தால் முதல்வர் ஸ்டாலின் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். குறிப்பாக கொளத்தூர் தொகுதியில் மட்டும் 9,000-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர்,” என்றார்.
மேலும் அவர் கூறியதாவது:
“தமிழக அரசு மதுவிற்பனைக்கு ரூ.600 கோடி இலக்கு நிர்ணயித்திருந்தாலும், தற்போது அது ரூ.750 கோடியைத் தாண்டியுள்ளது. இது அரசு மக்களை மது அருந்த வைக்கும் நோக்கத்திலேயே செயல்படுகிறது என்பதற்கான சான்று.
ஜூன் மாதத்தில் 6.30 லட்சம் ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டது, செப்டம்பரில் அறுவடை செய்யப்படும் என முன்கூட்டியே முதல்வருக்குத் தெரிந்திருந்தும், இதுவரை விவசாயிகளிடமிருந்து 60 சதவீத நெல் கூட அரசு கொள்முதல் செய்யவில்லை. இப்போது 40 சதவீத நெல் அறுவடைக்கு தயாராக இருக்கிறது.
இந்நிலையில் திடீரென மழை பெய்துவிட்டதாக வேளாண்மைத் துறை அமைச்சர் கூறுகிறார். ஆனால், காலநிலை மாற்றத்தை முன்கூட்டியே அறிய ரூ.10 கோடிக்கு இயந்திரங்கள் வாங்குவதாக நிதியமைச்சராக இருந்தபோது பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் கூறியிருந்தார். இதனால், உண்மை யார் சொல்கிறார்கள், பொய் யார் சொல்கிறார்கள் என்பது புரியவில்லை,” என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.