இந்தாண்டு 1,500 பேருக்கு டெங்கு: அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம்
தமிழகத்தில் இந்த ஆண்டில் இதுவரை 1,500 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சியின் பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலங்களில் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள், நிவாரண நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு துறைகளின் ஒருங்கிணைந்த பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நேற்று நீலாங்கரையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தலைமையேற்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது:
“சோழிங்கநல்லூர் தொகுதி 20 வார்டுகளைக் கொண்ட மிகப்பெரிய சட்டப்பேரவைத் தொகுதி. முதல்வரின் சிறப்பு கவனிப்பின் காரணமாக புதிய மழைநீர் வடிகால்வாய்கள் பல உருவாக்கப்பட்டுள்ளன. நாராயணபுரம் ஏரி நிரம்பும் போது, பள்ளிக்கரணை மற்றும் மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகள் முன்பு பெரும் பாதிப்பை சந்தித்தன. தற்போது கட்டப்பட்ட இணைப்புக் கால்வாய்களின் மூலம் அந்தப் பகுதிகள் பாதுகாக்கப்பட்டுள்ளன,” என்றார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
“டெங்கு காய்ச்சலால் கடந்த காலங்களில் ஏற்பட்ட உயிரிழப்புகள் 2012-ல் 66 பேர், 2017-ல் 65 பேர் என அதிகமாக இருந்தன. ஆனால் தற்போதைய அரசின் கடந்த 5 ஆண்டுகளாக டெங்கு மரணங்கள் ஒற்றை இலக்கத்திற்குள் மட்டுமே உள்ளன. இந்த ஆண்டு இதுவரை சுமார் 1,500 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் உயிரிழப்புகள் 9 பேர் மட்டுமே. அதிலும், இதய நோய் அல்லது பிற இணை நோய்களால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வராமல் வீட்டிலேயே இருந்தவர்களே உயிரிழந்துள்ளனர்,” என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் சோழிங்கநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ். அரவிந்த் ரமேஷ், மண்டல கண்காணிப்பு அலுவலர்கள் தெ. பாஸ்கரபாண்டியன், மகேஸ்வரி ரவிக்குமார், தெற்கு வட்டார துணை ஆணையர் அஃதாப் ரசூல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.