பயணிகளின் வசதிக்காக தெற்கு ரயில்வே பல முக்கிய வழித்தடங்களில் கூடுதல் பெட்டிகளை இணைக்க முடிவு செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக தாம்பரம் – செங்கோட்டை, தாம்பரம் – நாகர்கோவில் உள்ளிட்ட மொத்தம் 5 ரயில்களில் தற்காலிகமாக கூடுதல் பெட்டிகள் சேர்க்கப்படுகின்றன.
இதன்படி, தாம்பரம் – செங்கோட்டை இடையே இயங்கும் சிலம்பு அதிவேக ரயிலில் தற்காலிகமாக 7 கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. இதில் ஒரு ஏசி 2 அடுக்கு பெட்டி, இரண்டு ஏசி 3 அடுக்கு பெட்டிகள், மூன்று இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள் மற்றும் ஒரு பொதுப் பெட்டி சேர்க்கப்படுகின்றன. தாம்பரத்தில் இருந்து புறப்படும் ரயிலில் நவம்பர் 1 முதல், செங்கோட்டையில் இருந்து புறப்படும் ரயிலில் நவம்பர் 2 முதல் இவை இணைக்கப்படவுள்ளன.
அதேபோல், தாம்பரம் – நாகர்கோவில் இடையே இயக்கப்படும் விரைவு ரயிலிலும் தலா ஒரு ஏசி 2 அடுக்கு, இரண்டு ஏசி 3 அடுக்கு, மூன்று இரண்டாம் வகுப்பு தூங்கும் பெட்டிகள் மற்றும் ஒரு பொதுப் பெட்டி சேர்க்கப்படுகின்றன. தாம்பரத்தில் இருந்து புறப்படும் ரயிலில் நவம்பர் 2 முதல், நாகர்கோவிலில் இருந்து புறப்படும் ரயிலில் நவம்பர் 3 முதல் இவை இணைக்கப்படும்.
மேலும், சென்னை சென்ட்ரல் – திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே இயக்கப்படும் அதிவேக ரயிலில் ஒரு ஏசி 2 அடுக்கு பெட்டி சேர்க்கப்படவுள்ளது. இதற்கான இணைப்பு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் ரயிலில் நவம்பர் 3 முதல், திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படும் ரயிலில் நவம்பர் 4 முதல் அமலுக்கு வரும்.
இதனுடன், சென்னை சென்ட்ரல் – ஆலப்புழா மற்றும் கோயம்புத்தூர் – ராமேஸ்வரம் இடையே இயங்கும் ரயில்களிலும் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.