“விரைவில் தேர்தல் களத்தில் சந்திப்போம்; பிரதமருக்கு வெற்றியைப் பரிசளிப்போம்” – வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி வீடியோ!
உடல்நலக்குறைவு காரணமாகக் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கோவை வடக்கு தொகுதி வேட்பாளர் வானதி சீனிவாசன், தனது உடல்நிலை மற்றும் தேர்தல் பணிகள் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் அவர் பேசியதாவது:
“உங்கள் அனைவரின் அன்பு மற்றும் பிரார்த்தனையால் நான் தற்போது உடல் நலம் தேறி வருகிறேன். இன்னும் ஓரிரு நாட்களில் உங்களை நேரில் சந்திக்க வருகிறேன். அதுவரை தேர்தல் பிரச்சாரப் பணிகள் தொய்வின்றித் தொடர்ச்சியாக நடைபெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.”
மேலும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெறவுள்ள கலந்துரையாடல் நிகழ்வில், அனைவரும் Namo App மூலம் பங்கேற்று அந்த நிகழ்ச்சியைப் பெருவெற்றியாக மாற்ற வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.
“நமது பிரதமர் மோடியின் மீது நாம் கொண்டுள்ள அன்பை, இந்தத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) மாபெரும் வெற்றியின் மூலமாக நிரூபித்துக் காட்ட வேண்டும்” என்றும் வானதி சீனிவாசன் அந்த வீடியோவில் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். சிகிச்சையில் இருந்தபோதும் அவர் வெளியிட்டுள்ள இந்த உற்சாகமான செய்தி பாஜக தொண்டர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




