“₹8,000 கூப்பன் விநியோகம் மக்களை ஏமாற்றும் செயல்” – திமுக மீது தமிழிசை சௌந்தரராஜன் கடும் விமர்சனம்!
சென்னை மயிலாப்பூர் தொகுதிக்கு உட்பட்ட டாக்டர் நடேசன் சாலையில், பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து வீதி வீதியாகச் சென்று அவர் ஆதரவு திரட்டினார். அப்போது அப்பகுதி பெண்கள் அவருக்கு ஆர்த்தி எடுத்தும், தொண்டர்கள் மலர் தூவியும் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரச்சாரத்தின் போது அங்கிருந்த கை பம்ப் ஒன்றில் தண்ணீர் இறைத்து பொதுமக்களிடம் சகஜமாகப் பேசி அவர் வாக்கு சேகரித்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தமிழிசை சௌந்தரராஜன், திமுகவினர் வாக்காளர்களுக்கு எட்டாயிரம் ரூபாய் மதிப்பிலான கூப்பன்களை விநியோகிப்பதை கடுமையாக விமர்சித்தார்.
தமிழிசை சௌந்தரராஜன் பேசியதாவது:
“தேர்தலுக்கு முன்பே எட்டாயிரம் ரூபாய் கூப்பன் வழங்குவது மக்களை ஏமாற்றும் முயற்சியாகும். இது ஒரு மோசமான முன்னுதாரணம். இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது தேர்தல் ஆணையம் உடனடியாகத் தலையிட்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.”
மேலும், மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றத் தவறியவர்கள், இது போன்ற கவர்ச்சித் திட்டங்கள் மூலம் மக்களைத் திசைதிருப்பப் பார்ப்பதாக அவர் குற்றம் சாட்டினார். தமிழிசையின் இந்தப் புகார் தேர்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




