பிரபல பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணர் டாக்டர் கே. மாதங்கி ராமகிருஷ்ணன் காலமானார்
பிளாஸ்டிக் சர்ஜரி மற்றும் தீக்காய சிகிச்சைத் துறையில் முன்னோடியாக விளங்கிய டாக்டர் கே. மாதங்கி ராமகிருஷ்ணன் (91), வயது முதிர்வு காரணமாக சென்னையில் நேற்று காலமானார்.
அவரது கண்கள், அவரது விருப்பப்படி சங்கர நேத்ராலயா மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டன.
மாதங்கி ராமகிருஷ்ணனின் மகள் டாக்டர் பிரியா ராமச்சந்திரன் குழந்தைகள் நல அறுவை சிகிச்சை நிபுணராகவும், மருமகன் டாக்டர் பி. ராமச்சந்திரன் குழந்தைகள் தீவிர சிகிச்சை நிபுணராகவும் பணியாற்றி வருகின்றனர்.
தீக்காயம் மற்றும் ஒட்டுறுப்பு சிகிச்சை துறையின் வளர்ச்சிக்காக பெரும் பங்கு வகித்த மாதங்கி ராமகிருஷ்ணன், கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீக்காய சிகிச்சைப் பிரிவை உருவாக்கியவர்.
அவர் கண்டுபிடித்த ‘கொலாஜன் மெம்பரேன்’ (Collagen Membrane) எனப்படும் திசு புரதப் பட்டைகள், இன்றும் உலகம் முழுவதும் தீக்காயம் மற்றும் திசு மறுசீரமைப்பு சிகிச்சைகளில் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன.
சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் சொற்பொழிவுகள் ஆற்றி, இந்திய மருத்துவ துறைக்கு பெருமை சேர்த்தார். அவருக்கு பத்மஸ்ரீ, பி.சி. ராய் விருது, அவ்வையார் விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது உள்ளிட்ட பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், காஞ்சி காமகோடி குழந்தைகள் நல அறக்கட்டளை மருத்துவமனையை நிறுவிய குழந்தைகள் நல அறுவை சிகிச்சை நிபுணர் மறைந்த எம். எஸ். ராமகிருஷ்ணனின் மனைவியாவார் மாதங்கி. தனது இறுதி காலம் வரை அந்த மருத்துவமனையில் சேவையாற்றி வந்தார்.
மாதங்கி ராமகிருஷ்ணன் மறைவுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.