“திமுக ஆட்சியை வேரோடு அகற்ற வேண்டும்; எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வேண்டும்” – அன்புமணி ராமதாஸ் ஆவேசம்!
திமுக ஆட்சியைத் தமிழகத்திலிருந்து வேரோடு அகற்ற வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். கடலூர் மாவட்டம், விருத்தாசலம் சட்டமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் தமிழரசி ஆதிமூலத்தை ஆதரித்து, விருத்தாசலம் பாலக்கரை ரவுண்டானா பகுதியில் அவர் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது பொதுமக்களிடையே உரையாற்றிய அன்புமணி ராமதாஸ், “திமுகவின் இந்த ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து, செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதலமைச்சராக அமர்த்த வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். தமிழகத்தில் நாள்தோறும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும், போதைப்பொருட்களின் புழக்கத்தால் இளைஞர்களின் எதிர்காலம் சீரழிந்து வருவதாகவும் அவர் வேதனை தெரிவித்தார்.
மேலும், அரசு நிலங்களை 99 வருட குத்தகைக்கு விட்டு, அதன் மூலம் கோடிக்கணக்கில் முறைகேடாகப் பணம் சம்பாதித்த திமுக அமைச்சர் ஒருவர் விரைவில் சிறைக்குச் செல்வார் என்றும் அன்புமணி ராமதாஸ் அதிரடியாகத் தெரிவித்தார். இந்த பரப்புரை கூட்டத்தில் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த திரளான தொண்டர்கள் கலந்துகொண்டனர்.




