திரையரங்க உரிமையாளர்களுக்கு நடப்பு தயாரிப்பாளர்கள் முக்கிய கோரிக்கை
தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் வருடாந்திர பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இதில் தலைவர் டி.ஜி. தியாகராஜன், பொதுச் செயலாளர் டி. சிவா, பொருளாளர் தனஞ்செயன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. அதில் முக்கியமான ஒன்று — திரையரங்க வசூலில் வெளிப்படைத் தன்மை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையாகும்.
பொதுக்குழுவில் கூறப்பட்டதாவது:
“தமிழ்நாட்டில் தற்போது 1,150 திரையரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் விபரங்களை ஒருங்கிணைத்து வெளிப்படையாக கண்காணிக்க மையப்படுத்தப்பட்ட ஆன்லைன் மென்பொருள் அமைப்பு (Centralized Online Box Office Tracking Software System) தேவை. இதற்காக நமது சங்கம் அரசுக்கும், தொடர்புடைய அமைப்புகளுக்கும் கோரிக்கை வைத்துள்ளது.”
மேலும்,
“இந்த மென்பொருளை நடைமுறைப்படுத்த திரையரங்கு மற்றும் மல்டிபிளெக்ஸ் உரிமையாளர்கள் சங்கமும், திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கமும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என பொதுக்குழு வலியுறுத்தியுள்ளது.
அதோடு, ஆன்லைன் டிக்கெட் புக்கிங் சேவைகள் குறித்தும் கோரிக்கை வைக்கப்பட்டது:
“புக் மை ஷோ, சோமோட்டோ டிஸ்ட்ரிக்ட் போன்ற ஆன்லைன் டிக்கெட் புக்கிங் நிறுவனங்கள் வசூலிக்கும் கட்டணத்தில் இருந்து, திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும் சரியான பகிர்வு (Revenue Share) வழங்கப்பட வேண்டும். திரையரங்கு உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள், மற்றும் ஆன்லைன் புக்கிங் நிறுவனங்கள் ஆகிய மூவருக்கும் சமமான பங்கு வழங்கப்பட வேண்டும்.”
மேலும், பெப்சி தொழிலாளர் அமைப்பு தொடங்கியுள்ள பெஸ்ரா (Bestra) திட்டம் குறித்தும் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது.
அதன்படி, தொழிலாளர்கள் ஸ்வைப் கார்டு மூலம் வருகை பதிவு செய்து, அதன்படி வாராந்திர சம்பளம் பெறும் முறைக்கு நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் முழு ஒத்துழைப்பு அளிக்க தீர்மானித்துள்ளது.
இந்தக் கூட்டத்தில், தயாரிப்பாளர்களின் நலன் மற்றும் திரைப்படத் துறையின் வெளிப்படையான வளர்ச்சிக்காக பல்வேறு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன.