ஆத்தூரில் தபால் வாக்குகள் பெறும் பணி தீவிரம்: வீடு வீடாகச் சென்று தேர்தல் அலுவலர்கள் சேகரிப்பு!
தமிழகத்தில் தேர்தல் பணிகள் விறுவிறுப்படைந்துள்ள நிலையில், சேலம் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் தபால் வாக்குகளைப் பெறும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இத்தொகுதியில் தபால் மூலம் வாக்களிக்கத் தகுதியுள்ள 649 முதியவர்கள் மற்றும் 663 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 1,012 பேர் கண்டறியப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, ஆத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து 19 குழுக்களாகப் பிரிந்த தேர்தல் அலுவலர்கள், வாக்காளர்களின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று வாக்குகளைச் சேகரித்து வருகின்றனர். முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி வாக்களிக்கும் வகையில், சீலிடப்பட்ட வாக்குப்பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டு, ரகசியம் காக்கப்படும் வகையில் வாக்குச் சீட்டுகள் மூலம் வாக்குகள் பெறப்படுகின்றன. தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையால், வாக்குச்சாவடிக்கு வர இயலாத நிலையிலும் தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்றுவதில் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.




