ஆ.ராசாவின் ஆடியோ விவகாரத்தை திமுகவினர் மறுக்காதது ஏன்? – மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி!
திருப்பூர்:
திமுகவை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்பதே தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒற்றை இலக்கு என மத்திய அமைச்சரும், அவிநாசி தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
ஆ.ராசா மற்றும் ஊழல் புகார்
ஊடகவியலாளர் ஆனந்த் T பிரசாத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில் எல்.முருகன் கூறுகையில், “திமுக எம்.பி ஆ.ராசாவைத் தமிழக மக்கள் ஒரு மிகப்பெரிய ஊழல்வாதியாகவே பார்க்கின்றனர். திமுகவையும், ஊழலையும் யாராலும் பிரிக்க முடியாது என்பதை மக்கள் நன்கு அறிவார்கள். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி தொடங்கி, அக்கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் வரை ஊழல் என்பது மிகவும் நெருக்கமான ஒன்றாக உள்ளது” என்று கடுமையாகச் சாடினார்.
மறுக்கப்படாத ஆடியோ விவகாரம்
சமீபத்தில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்திய ஆ.ராசாவின் ஆடியோ விவகாரம் குறித்துப் பேசிய அவர், “அந்த ஆடியோவில் உள்ள தகவல்களை திமுகவின் முக்கியத் தலைவர்கள் ஒருவர் கூட இதுவரை மறுக்கவில்லை. இதுவே அந்த ஆடியோவின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்துகிறது” என்று சுட்டிக்காட்டினார்.
விலைவாசி உயர்வு
தமிழகத்தில் தற்போது நிலவி வரும் கடும் விலைவாசி உயர்வால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி இருப்பதாகவும், இதன் காரணமாக வரவிருக்கும் தேர்தலில் திமுகவை மக்கள் ஓட ஓட விரட்டியடிப்பார்கள் என்றும் எல்.முருகன் தெரிவித்தார்.
அவிநாசி தொகுதியில் தீவிரப் பரப்புரையில் ஈடுபட்டு வரும் எல்.முருகன், திமுகவின் ஊழல் புகார்களை முன்வைத்துத் தனது பிரசாரத்தை முன்னெடுத்து வருகிறார்.




