துபாயில் உயிரிழந்த ராமநாதபுரம் இளைஞரின் உடலை தமிழகத்துக்கு கொண்டு வர பாஜக அயலக தமிழர் பிரிவு உதவி
துபாயில் உயிரிழந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞரின் உடல், பாஜக அயலக தமிழர் பிரிவு மாநில தலைவர் கே.எம். சுந்தரம் அவர்களின் முயற்சியால் தமிழகம் கொண்டு வரப்பட்டு, குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், அந்த குடும்பத்துக்கு தேவையான உதவிகளும் பாஜக நிர்வாகிகளால் வழங்கப்பட்டு வருகின்றன.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள மணிவலை கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து (33). அவரது மனைவி சசிகலா, அவர்களுக்கு இரு மாதம் வயதான பெண் குழந்தை உள்ளது. துபாயில் வேலை செய்து வந்த மாரிமுத்து, திடீரென உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கடந்த 18ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார்.
இந்த செய்தி குடும்பத்தினருக்கு தெரியவந்ததும், அவருடைய உடலை துபாயிலிருந்து தமிழகம் கொண்டு வர முயற்சிகள் தொடங்கப்பட்டன. ஆனால் தேவையான உதவிகள் கிடைக்காமல் குடும்பத்தினர் சிரமப்பட்டனர்.
இச்செய்தி பாஜக அயலக தமிழர் பிரிவு மாநில தலைவர் கே.எம். சுந்தரம் அவர்களின் கவனத்துக்குச் சென்றது. இதையடுத்து, மாநிலச் செயலாளர் எல். அன்பழகன், ராமநாதபுரம் மாவட்டத் தலைவர் என்.கே. கோபால், மற்றும் பாஜக நிர்வாகிகள் இணைந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
மத்திய அரசின் உதவியுடன் துபாயில் உள்ள இந்திய தூதரகம் வழியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு, மாரிமுத்துவின் உடல் கடந்த 23ஆம் தேதி விமானம் மூலம் திருச்சி கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் அவரது சொந்த ஊரான மணிவலைக்குக் கொண்டு செல்லப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதற்கான முழு செலவையும் பாஜக அயலக தமிழர் பிரிவு ஏற்றுக்கொண்டது. மேலும், இறுதி ஊர்வலத்திலும் பங்கேற்று, குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளையும் தொடர்ந்து செய்து வருகின்றனர்.