“ஓய்வு பெற்ற பணியிடங்களைக் கூட திமுக அரசு நிரப்பவில்லை” – அவிநாசியில் அண்ணாமலை கடும் விமர்சனம்!
அவிநாசி சட்டமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் மத்திய அமைச்சர் எல்.முருகனை ஆதரித்து, பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது திமுக அரசின் நிர்வாகத் தோல்விகள் குறித்துப் பல்வேறு புள்ளிவிவரங்களுடன் அவர் உரையாற்றினார்.
பிரசாரத்தின் போது பேசிய அண்ணாமலை, “தேர்தல் நேரத்தில் 590 வாக்குறுதிகளை அளித்த முதலமைச்சர் ஸ்டாலின், அதில் வெறும் 70 வாக்குறுதிகளை மட்டுமே இதுவரை நிறைவேற்றியுள்ளார். கல்விக்கடன் ரத்து, சிலிண்டர் மானியம், பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் போன்ற முக்கிய வாக்குறுதிகளின் நிலை என்ன ஆனது?” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், வேலைவாய்ப்பு குறித்துப் பேசிய அவர், “3,50,000 பேருக்கு அரசுப் பணி வழங்கப்படும் என்று கூறிவிட்டு, வெறும் 94,000 பேருக்கு மட்டுமே பணி வழங்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் 1,05,000 அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றுள்ள நிலையில், அந்த காலிப் பணியிடங்களைக் கூட நிரப்பத் திராணியற்ற அரசாகத் திமுக அரசு உள்ளது” என்று கடுமையாகச் சாடினார். அவிநாசி தொகுதியில் எல்.முருகனின் வெற்றி உறுதி எனக் குறிப்பிட்ட அண்ணாமலையின் இந்தப் பேச்சு, அரசுப் பணியிடங்களுக்காகக் காத்திருக்கும் இளைஞர்களிடையே பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.




