வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு: கூட்டணி கட்சிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (SIR) இன்று தொடங்கும் என தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அடுத்தடுத்த நடவடிக்கைகளை தீர்மானிக்க திமுக தலைமையில் கூட்டணிக் கட்சிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் சென்னை திமுக தலைமையகத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமையேற்றார். அமைச்சர்கள் கே.என். நேரு, தங்கம் தென்னரசு, எ.வ. வேலு, எஸ். ரகுபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், கூட்டணி கட்சிகள் சார்பில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், விசிக எம்.பி. ரவிக்குமார், காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வீ. தங்கபாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனையில், எஸ்ஐஆர் திட்டத்துக்கு எதிராக மாநில அளவில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் வெளியிட்ட அறிக்கையில், பீஹாரில் செயல்படுத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் உண்மையான வாக்காளர்களை நீக்குவதற்கான சதியாக இருந்தது என்று கூறப்பட்டுள்ளது.
அதேபோல, தமிழகத்தில் நவம்பர்–டிசம்பர் மாதங்களில் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவது வடகிழக்கு பருவமழை நேரத்தில் சிரமம் அளிக்கும் என்றும், வாக்காளர் பட்டியலை சீரமைப்பதை எதிர்க்கவில்லை என்றாலும் அவசரமாக மேற்கொள்ளக் கூடாது என்றும் கூட்டணி கட்சிகள் தெரிவித்துள்ளன.
இத்திட்டத்தின் பின்னணியில் தமிழக மக்களின் வாக்குரிமையை பறிக்கும் சதி இருக்கலாம் என்ற சந்தேகத்தை அவர்கள் வெளியிட்டுள்ளனர்.
இதனை மாநில அளவிலான முக்கிய பிரச்சினையாகக் கருதி, அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்று திரண்டு இதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டம் நவம்பர் 2ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது, இதில் அனைத்து கட்சித் தலைவர்களும் அரசியல் வேறுபாடுகளை தாண்டி பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.