“மதுரையின் 10 தொகுதிகளிலும் என்டிஏ அமோக வெற்றி பெறும்” – பாஜக வேட்பாளர் ராம. சீனிவாசன் நம்பிக்கை!
மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்யும் என்று மதுரை கிழக்குத் தொகுதி பாஜக வேட்பாளர் ராம. சீனிவாசன் தெரிவித்துள்ளார். ‘தமிழ் ஜனம்’ தொலைக்காட்சிக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில், தமிழக அரசியல் நிலவரம் குறித்து அவர் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
திமுக ஆட்சியில் மக்கள் கடும் ஏமாற்றத்தைச் சந்தித்துள்ளதாகவும், தற்போது அவர்கள் ஒரு நிலையான மாற்றத்தை விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார். “தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, ஊழல் புகார்களில் சிக்கியுள்ள திமுகவினர் நிச்சயம் பதில் சொல்லியே ஆக வேண்டும்” என்று அவர் எச்சரித்தார். மேலும், பாகிஸ்தான் விவகாரத்தில் திமுக எம்.பி.க்கள் தெரிவிக்கும் கருத்துகள் கண்டனத்திற்குரியவை என்றும் அவர் சாடினார்.
காங்கிரஸ் மற்றும் திமுக இடையிலான கூட்டணி பெரும் குழப்பத்தில் உள்ளதாகக் குறிப்பிட்ட ராம. சீனிவாசன், காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு அக்கட்சியின் தலைவர்களான ராகுல் காந்தி அல்லது சோனியா காந்தி முறைப்படி வாழ்த்துகளைக் கூடத் தெரிவிக்கவில்லை என்று சுட்டிக்காட்டினார். இந்த உட்கட்சிப் பூசல்களால் திமுக கூட்டணி மிகப்பெரிய தோல்வியைச் சந்திக்கும் என்றும், மதுரை மாவட்ட மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தங்களது முழு ஆதரவை வழங்குவார்கள் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.




