சிதம்பரத்தில் ஏபிவிபி பொதுக்கூட்டத்தில் ரகளை: விசிகவினர் நாற்காலிகளை வீசி அராஜகம் – பரபரப்பு!
கடலூர் மாவட்டம் சிதம்பரம் காந்தி சிலை அருகே, அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP) சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. “மாணவர்களின் குரல், மாற்றத்திற்கான குரல்” என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ஏபிவிபி வட தமிழக மாநில செயலாளர் பன்னீர்செல்வம் உரையாற்றிக் கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த நபர்கள் மதுபோதையில் ஏபிவிபி பொறுப்பாளர்களைத் தகாத வார்த்தைகளால் பேசியதுடன், மேடையிலிருந்த நாற்காலிகளைத் தூக்கி எறிந்து ரகளையில் ஈடுபட்டனர். மேலும், மத்திய செயற்குழு உறுப்பினர் வேதாஞ்சலியை அவமரியாதை செய்ததோடு, கூட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் மீதும் தாக்குதல் நடத்தி இடையூறு விளைவித்தனர்.
திடீரென அரங்கேறிய இந்த அராஜகச் செயலால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. பொதுக்கூட்டத்தில் புகுந்து தாக்குதல் நடத்தியது குறித்துத் தகவல் அறிந்த காவல்துறையினர், சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேர்தல் நெருங்கும் வேளையில் மாணவர் அமைப்பின் கூட்டத்தில் நடத்தப்பட்ட இந்த வன்முறைச் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




