அவிநாசியில் என்டிஏ தேர்தல் பணிமனை திறப்பு: விவசாயிகளுடன் தேநீர் அருந்தி எல்.முருகன் வாக்கு சேகரிப்பு!
அவிநாசி சட்டமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) சார்பில் போட்டியிடும் மத்திய அமைச்சரும், பாஜக வேட்பாளருமான எல்.முருகன், இன்று தொகுதியில் தேர்தல் பணிமனை அலுவலகத்தைத் திறந்து வைத்தார். கூட்டணிக் கட்சி நிர்வாகிகளின் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வைத் தொடர்ந்து, தேர்தல் களப்பணிகள் குறித்து முக்கிய ஆலோசனைகளை அவர் வழங்கினார்.
சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் மற்றும் பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் கலந்துரையாடிய எல்.முருகன், சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்களை அணுகும் முறைகள் மற்றும் பூத் வாரியாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விரிவான அறிவுறுத்தல்களை வழங்கினார். தேர்தல் செயல்பாடுகளைத் தொய்வின்றி முன்னெடுத்துச் செல்ல வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, அவிநாசி தொகுதிக்குட்பட்ட கருவலூர் உள்ளிட்ட பகுதிகளில் அவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, எளிமையான முறையில் சாலையோர தேநீர் கடை ஒன்றில் அமர்ந்து விவசாயிகளுடன் தேநீர் அருந்தியவாறு கலந்துரையாடிய எல்.முருகன், அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து ஆதரவு திரட்டினார். மத்திய அமைச்சரின் இந்த எதார்த்தமான அணுகுமுறை அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.




