“உயர் அதிகாரிகளின் உத்தரவுகளை மட்டுமே பின்பற்ற வேண்டும்” – டி.ஜி.பி. சந்தீப்ராய் ரத்தோர் அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில், மாநிலக் காவல்துறைத் தலைவர் (டி.ஜி.பி.) சந்தீப்ராய் ரத்தோர் காவல்துறை அதிகாரிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் எவ்வித சமரசமுமின்றி முழுமையாகப் பின்பற்றப்படுவதைக் காவல்துறை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
குறிப்பாக, பணிமூப்பு மற்றும் அதிகார வரம்பிற்கு உட்பட்ட நேரடி உயர் அதிகாரிகள் பிறப்பிக்கும் உத்தரவுகளை மட்டுமே கீழ்நிலை அதிகாரிகள் பின்பற்ற வேண்டும் என்று அவர் கட்டளையிட்டார். சில மாவட்ட எஸ்.பி.க்கள், தங்களுக்குத் தொடர்பில்லாத பிற அதிகாரிகள் பிறப்பிக்கும் உத்தரவுகளைப் பின்பற்றுவதாகத் தகவல் கிடைத்துள்ளதைச் சுட்டிக்காட்டிய டி.ஜி.பி, இத்தகைய அதிகார வரம்பு மீறல்கள் கண்டறியப்பட்டால் அது குறித்து உடனடியாகத் தனக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். தேர்தல் நேரத்தில் காவல்துறையினர் தங்களது அதிகார வரம்பிற்கு உட்பட்டு முறைப்படி செயல்படுவதை உறுதி செய்யும் நோக்கில் இந்த அறிவுறுத்தல் வெளியிடப்பட்டுள்ளது.





