காரைக்காலில் பரபரப்பு: பாஜக வேட்பாளர் வீட்டின் மீது வெடி வீச்சு – திமுகவினர் மீது குற்றச்சாட்டு!
காரைக்காலில் தேர்தல் இறுதிக்கட்டப் பிரச்சாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், பாஜக வேட்பாளர் வீட்டின் மீது வெடி வீசப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நிரவி-திருப்பட்டினம் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மீனாட்சி சுந்தரத்தின் வீட்டின் முன்பாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுகவினர், திடீரென வெடிகளைப் பற்றவைத்து வீசியதாகக் கூறப்படுகிறது. இதில் வீட்டின் கதவு உடைந்து சேதமடைந்தது.
சம்பவம் நடந்த போது வீட்டில் யாரும் இல்லாததால் பெரும் உயிர்ச் சேதம் மற்றும் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டன. அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், ரகளையில் ஈடுபட்டவர்களை உடனடியாக விரட்டியடித்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், மோதலில் ஈடுபட்ட நபர்கள் குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேர்தல் நெருங்கும் வேளையில் வேட்பாளர் வீட்டின் மீதே தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது அப்பகுதியில் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




