“புதுச்சேரியில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி” – காரைக்காலில் அண்ணாமலை உறுதி!
புதுச்சேரியில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று பாஜக மூத்த தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். புதுச்சேரியின் 30 தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 9, வியாழக்கிழமை அன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், காரைக்கால் மாவட்டத்தில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அவர் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
திருநள்ளாறு தொகுதி பாஜக வேட்பாளர் ராஜசேகரன் மற்றும் நிரவி-திருப்பட்டினம் தொகுதி வேட்பாளர் மீனாட்சி சுந்தரம் ஆகியோரை ஆதரித்து வாக்கு சேகரித்த அண்ணாமலை, புதுச்சேரி மாநிலம் முழுமையான வளர்ச்சி பெறத் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தொடர்ச்சி அவசியம் என்று குறிப்பிட்டார். மேலும், அண்டை மாநிலமான தமிழகத்தில் திமுக ஆட்சி வேண்டாம் என மக்கள் ஏற்கனவே முடிவு செய்துவிட்டதாகவும், அதன் தாக்கம் புதுச்சேரி தேர்தலிலும் எதிரொலிக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். புதுச்சேரியின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்காக மக்கள் மீண்டும் என்.டி.ஏ கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.




