கோவை தெற்கு: செந்தில் பாலாஜி வேட்புமனு ஏற்பு – அதிமுக, நாதக வேட்பாளர்கள் கடும் எதிர்ப்பு!
தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கோவை தெற்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டதாகத் தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்தார். இதற்கு அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினர் கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர்.
செந்தில் பாலாஜியின் வேட்புமனுவில் பல்வேறு தவறுகள் இருப்பதாகவும், முறையான தகவல்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டிய அதிமுக மற்றும் நாதக வேட்பாளர்கள், அவரது மனுவை நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனிடையே, வேட்புமனு பரிசீலனையின் போது திமுகவினர் தங்களை மிரட்டும் வகையில் பேசியதாக நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பேரறிவாளன் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார். இச்சம்பவம் தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




