வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி: அனைத்துக் கட்சிகளுடனான ஆலோசனை நாளை
தமிழகத்தில் நடைபெறவுள்ள வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி குறித்து, மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் நாளை (அக்டோபர் 29) அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனும் ஆலோசனை நடத்தவுள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கனவே பீகாரில் முதல் கட்டமாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியை மேற்கொண்டது. அதனைத் தொடர்ந்து, தமிழகம் உட்பட 12 மாநிலங்களில் இரண்டாம் கட்ட திருத்தப்பணிக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. இதற்கான முன்னேற்பாடுகள் தற்போது தமிழகத்தில் நடைபெற்று வருகின்றன.
சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த தேர்தல் வழக்கில் ஆணையம் அளித்த பதிலில், தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி விரைவில் தொடங்கும் எனத் தெரிவித்தது. அதன்படி, நவம்பர் 4-ஆம் தேதி மாநிலம் முழுவதும் திருத்தப்பணி தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது தமிழகத்தில் மொத்தம் 6.41 கோடி வாக்காளர்கள் உள்ளனர்; மேலும் சுமார் 70 ஆயிரம் வாக்குச்சாவடிகள் செயல்படுகின்றன. இதையொட்டி, அந்த வாக்குச்சாவடிகளுக்கான அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்புகள் இன்று தொடங்கியுள்ளன. தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், நவம்பர் 3க்குள் அனைத்து பயிற்சிகளையும் நிறைவு செய்ய உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையில், நாளை நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.
வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 9-ஆம் தேதி வெளியிடப்படும்; இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 7-ஆம் தேதி வெளியாகும் என தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கிடையில், அதிமுக இச்சிறப்பு தீவிர திருத்தப்பணியை வரவேற்று தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது.